அல்ட்ராசவுண்ட் ஸ்கான் என்றால் என்ன?
அல்ட்ராசவுண்ட் உங்கள் பிள்ளையின் உடலின் உட்பாகங்களைப் படம் பிடிப்பதற்காக ஒலி அலைகளை உபயோகிக்கிறது. இந்தப் படங்கள் உடற்பாகங்களின் அளவு, வடிவம், மற்றும் தன்மையைப் பற்றிய விபரங்களை உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குக் கொடுக்கிறது.
உங்கள் பிள்ளையை ஸ்கான் செய்யவும் மற்றும் பரிசோதனையின்போது அவனைப் பராமரிப்பதற்கும் ஒரு ஒலி வரைபடம் எடுப்பவர் மற்றும் ஒரு ஊடுகதிவீச்சியல் மருத்துவர் என்பவர்கள் உட்படுவார்கள். ஒலி வரைபடம் எடுப்பவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கான் கருவிகளை உபயோகிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர். ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர், அல்ட்ராசவுண்ட் ஸ்கான் போன்ற, உடலின் உட்பாகங்களின் படங்களைப் பரிசோதிப்பதில் தேர்ச்சி பெற்றவராவார். ஒலி வரைபடம் எடுப்பவரும் ஊடுகதிர்வீச்சியல் மருத்துவரும் உங்கள் பிள்ளையின் நுட்பமாக ஆராய்ந்த படங்களின் முடிவை, உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கொடுப்பார்கள்.
அனேக மருத்துவர்களின் அலுவலகங்களில் அல்ட்ராசவுண்ட் ஸ்கான் கருவிகள் இருக்கின்றன. உங்கள் பிள்ளையின் நிலைமையைப் பொறுத்து, பரிசோதனை ஒரு மருத்துவமனையில் செய்யப்படலாம்.
வழக்கமாக, அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனை 45 நிமிடங்கள் வரை எடுக்கலாம், ஆனால் கொஞ்சம் அதிக நேரம் கூட செல்லலாம்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனைக்காகத் தயார் செய்தல்
பரிசோதனை செய்யப்படப்போகும் உடல் பாகத்தைப் பொறுத்து, உங்கள் பிள்ளை கொஞ்சம் தண்ணீர் அல்லது தெளிவான பானங்கள் குடிக்கவேண்டியிருக்கலாம். ஆயினும், சில சமயங்களில், வெறும் வயிற்றில் பரிசோதனை செய்வது அதன் முடிவை இலகுவாக வாசிக்க உதவி செய்கிறது. இந்த நிலைமை ஏற்பட்டால், பரிசோதனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக உங்கள் பிள்ளை எதையுமே சாப்பிட மற்றும் குடிக்க வேண்டாம் எனக் கேட்கப்படலாம்.
உங்கள் பிள்ளைக்கு நீரிழிவு நோய் அல்லது வளர்சிதை சிக்கல் இருந்தால், அவன் உணவு உண்ணாதிருக்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் பிள்ளையை எப்படி தயார் செய்வது என்பதில் நீங்கள் நிச்சயமற்றிருந்தால், உங்கள் மருத்துவர் அல்லது அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்யும் தொழில் நுட்ப வல்லுனரைக் கேட்கவும்.
பொதுவான சில வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
வயிற்றில் அல்ட்ராசவுண்ட் ஸ்கான்
உங்கள் பிள்ளைக்கு வயிற்றுப் பகுதியில் அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்யப்படுவதானால், பரிசோதனைக்குமுன் அவன் பட்டினி இருக்கவேண்டும். அதாவது அவன் தண்ணீர் அல்லது அப்பிள் ஜூஸ் தவிர வேறு எதையுமே உண்ண அல்லது குடிக்கக் கூடாது. உங்கள் பிள்ளையின் வயதைப் பொறுத்து அவன் எவ்வளவு நேரத்துக்கு பட்டினி இருக்க வேண்டும் என்பது முடிவுசெய்யப்படும்.
வயது(வருடங்கள்) | உணவு உண்ணாதிருக்கும் காலம் |
---|---|
0 முதல் 2 | 2 மணி நேரங்கள் |
3 முதல் 4 | 3 மணி நேரங்கள் |
4 க்குக்கு மேற்பட்ட | 4 நேரங்கள் |
இடுப்பில் அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனை
சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை, மற்றும் கருப்பை போன்ற இடுப்பு உறுப்புகளைப் பரிசோதிப்பதற்கு, நோயாளிகளை சிறுநீர்ப்பையை ஓரளவு நிரப்ப முயற்சிக்கும்படி கேட்போம். உங்கள் சந்திப்புத் திட்டத்துக்கு ஒரு மணி அல்லது 90 நிமிடங்களுக்கு முன்பு, உங்கள் பிள்ளை 2 முதல் 3 கிளாஸ்கள் தண்ணீர் அல்லது அப்பிள் ஜூஸ் பருக முயற்சிக்க வேண்டும்.
பரிசோதனைக்காக உங்கள் பிள்ளையைத் தயார் செய்தல்
சில வேளைகளில் பிள்ளைகள் புதிய அனுபவத்தால் பதற்றமடையலாம். இந்தத் தகவலைக் கவனமாகப் படித்துப் பார்க்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை விளங்கிக்கொள்ளக்கூடிய வார்த்தைகளில் அவனுக்கு விளக்கிச் சொல்லுங்கள். எவற்றை எதிர்பார்க்கவேண்டும் என அறிந்திருக்கும் பிள்ளைகள் குறைந்தளவு பதற்றமுள்ளவர்களாயிருப்பார்கள். உங்கள் பிள்ளை ஒத்துழைக்கும்போது, அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனை இலகுவானதாக மற்றும் விரைவானதாக இருக்கும். பரிசோதனை நேரம் முழுவதும் நீங்கள் உங்கள் பிள்ளையுடன் இருப்பீர்கள் என்பதை அவனுக்கு விளக்கிச் சொல்லவும்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனையினால் எந்த ஆபத்துமில்லை. அது வலியை உண்டாக்காது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்யும்போது
உங்கள் பிள்ளை உள்வாங்கப்பட்டபின், ஒலி வரைபடம் பிடிப்பவர் அவனை ஸ்கான் எடுக்கப்படும் அறைக்குக் கொண்டுசெல்வார். ஒலி வரைபடம் எடுக்கப்படும் அறை ஒரு படுக்கை, ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் படம் எடுக்கும் இயந்திரம், மற்றும் எடுக்கப்படும் படங்களைக் காண்பிக்கும் ஒரு திரை என்பனவற்றைக் கொண்டிருக்கும். ஒலி வரைபடம் எடுப்பவர் திரையை இலகுவாகப் பார்ப்பதற்காக அறையில் மின் விளக்குகள் அணைக்கப்படும்.
உங்கள் பிள்ளையின் உடலில் ஸ்கான் எடுக்கப்படும் பகுதியிலுள்ள ஆடைகள் அகற்றப்படும் அல்லது தளர்வாக்கப்படும், அல்லது ஸ்கான் எடுக்கப்படுவதற்கு முன்பாக அவனுக்கு மருத்துவமனை மேலாடை அணிவிக்கபடலாம். அதன் பின்பு உங்கள் பிள்ளை படுக்கையில் படுக்க வைக்கப்படுவான்.
ஒலி வரைபடம் எடுப்பவர் சோதனைக்கோல் என்றழைக்கப்படும் ஒரு சிறிய கையில்-பிடித்துக் கொள்ளும் புகைப்படக் கருவியினால் உடலைப் படம் பிடிப்பார். ஒலி வரைபடம் எடுப்பவர் சூடான ஜெல்லை சோதனைக்கோலில் தடவுவார். ஜெல் சூடான மென்மையான கிறீம் போன்ற உணர்ச்சியைக் கொடுக்கும். அது தீங்கிழக்காது. உங்கள் பிள்ளையின் உடலில் ஸ்கான் எடுக்கவேண்டிய பகுதியில் சோதனைக்கோல் மெதுவாக வைக்கப்படும்.
சோதனைக்கோல் உங்கள் பிள்ளையின் உடலில் அசையும்போது, ஒரு அசையும் படம் அல்ட்ராசவுண்ட் ஸ்கான் திரையில் தோன்றும். ஒரு அசையாப் படம் எடுக்கும்போது உங்கள் பிள்ளையை மூச்சுப் பிடிக்கும்படி ஒலி வரைபடம் எடுப்பவர் கேட்கக் கூடும். பரிசோதனையின்போது அநேக படங்கள் எடுக்கப்படும்.
ஒலி வரைபடம் எடுப்பவர் படங்கள் எடுத்தபின், அவற்றை ஊடுகதிர்வீச்சியல் மருத்துவரிடம் காண்பிப்பார். ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர் அவற்றைப் பார்வையிடும்போது, ஸ்கான் எடுக்கும் அறையில் காத்திருக்கும்படி நீங்கள் கேட்கப்படலாம். சிலவேளைகளில், ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர் உங்களை வந்து சந்திக்கலாம், அல்ல்து மேலுமான படங்கள் தேவைப்படலாம். ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர் எல்லாப் படங்களையும் பரிசோதித்த பின், ஒலி வரைபடம் எடுப்பவர் உங்களை போக அனுமதிப்பார்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கான் பரிசோதனையினால் பக்க விளைவு அல்லது பின்விளைவு எதுவுமில்லை.
பரிசோதனை முடிவுகள் பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்களுடன் கலந்து பேசுவார்
ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர் உங்கள் பிள்ளையின் ஸ்கான் ஒலிப்படங்களைப் பரிசோதிப்பார். உங்கள் பிள்ளைக்கு வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றையும் அவர் பரிசோதிப்பார். பின்னர் மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று உங்கள் மருத்துவருக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் அடுத்த சந்திப்புத் திட்டத்தின் போது உங்கள் பிள்ளையின் மருத்துவர் இந்த ஆய்வறிக்கையைப் பற்றிக் கலந்து பேசுவார்.
முக்கிய குறிப்புகள்
- ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் இயந்திரம் உங்கள் பிள்ளையின் உடலின் உட்பாகங்களைப் படம் பிடிப்பதற்காக ஒலியலைகளை உபயோகிக்கிறது.
- பரிசோதனையின்போது என்ன சம்பவிக்கும் என்பதை உங்கள் பிள்ளைக்குத் தெரியப்படுத்துங்கள். பரிசோதனை நேரம் முழுவதும் நீங்கள் உங்கள் பிள்ளையுடன் இருப்பீர்கள் என்று அவனுக்குச் சொல்லுங்கள்.
- பரிசோதனைக்கு முன்பு உங்கள் பிள்ளை ஏதாவது உணவு அல்லது நீராகாரம் எடுத்துக்கொள்ள கூடாத என்று அல்ட்ராசவுண்ட் ஸ்கான் கிளினிக் பணியாளரிடம் கேட்கவும்.
- அல்ட்ராசவுண்ட் ஸ்கான் வலியை ஏற்படுத்தாது; அவற்றிற்கு எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை.