இரத்தப் பரிசோதனை (பிளட் வர்க்ஸ்) என்பது என்ன?
அநேகமான பிள்ளைகளுக்கு ஒரு சமயத்தில் இரத்தப் பரிசோதனை தேவைப்படும். ஒரு பிள்ளை நோயுற்றிருக்கும்போது அல்லது தொடரும் ஒரு சிகிச்சையின் பாகமாக அவளுடைய இரத்தம் ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம். இது ஒர் இரத்தப் பரிசோதனை எனப்படும். இரத்ததை எடுப்பதற்காக ஒரு தாதி அல்லது மருத்துவமனையில் உள்ள ஒருவர் பிள்ளையின் இரத்த நாடிக்குள் ஒரு ஊசியை ஏற்றுவார்.
எதை எதிர்பார்ப்பது என்பதைத் தெரிவிப்பதன் மூலம் இரத்தப் பரிசோதனை ஒன்றிற்கு உங்கள் பிள்ளையை நீங்கள் தயார்ப்படுத்தலாம்.
வழக்கமாக, பிள்ளைக்கு ஒரு இரத்தப் பரிசோதனை தேவை என்பதை அவளுக்கு முன்கூட்டியே சொல்லுவது மிகச் சிறந்ததாகும். என்ன நடைபெறும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் போது அவளின் கவலை குறைந்துவிடுகிறது. அதிக முன்னதாகவே தங்களுடைய பிள்ளைகளுக்கு இதைத் தெரிவித்தால், பிள்ளை அதிகம் கவலைப்படுமென சில பெற்றோர் நம்புகின்றனர். அநேகமான பிள்ளைகளுக்கு மருத்துவ மனைக்குச் செல்வதற்கு ஒரு அல்லது இரு தினங்களுக்கு முன் இதைத் தெரிவிப்பது நல்ல யோசனையாகும்.
உதவுவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யலாம்
இரத்தப் பரிசோதனை ஒன்றிற்கு உங்கள் பிள்ளையைத் தயார்ப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம் என்பது பிள்ளையின் வயதிலேயே தங்கியிருக்கின்றது. மிக இளம் பிள்ளை ஒன்றிற்கும் சற்று வயது வந்த பிள்ளைக்கும் தேவைப்படும் உதவி வித்தியாசமானதாக இருக்கின்றது.
அழுத்தம் நிறைந்த சூழ்நிலையின் கீழ் நீங்கள் எவ்வாறு செயற்படுகிறீர்கள் என்பது உங்கள் பிள்ளையின் பிரதிபலிப்பின் மீது செல்வாக்குச்செலுத்தும். உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு ஊசி குத்தப்போவதை நினைத்து நீங்கள் கவலைப்படுவதை வெளிக்காட்டினால் உங்கள் பிள்ளை இன்னும் அதிகம் கவலைப்படத் தொடங்கிவிடும். உங்கள் பிள்ளைக்கு ஊசி குத்தப் போவதைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் நிதானமாக இருந்தால் உங்கள் பிள்ளையும் கவலையின்றி இருக்கக்கூடும்.
உங்கள் பிள்ளையின் கவனத்தை திசைதிருப்புவது உதவும்
பொதுவாக கவனத்தைத் திசை திருப்புவது எந்த ஒரு பிள்ளைக்கும் உதவும். ஊசி குத்தப்போகும்போது கவனத்தை திசை திருப்புவதற்கான சிறந்த வழி பிள்ளையின் வயதிலேயே தங்கியுள்ளது.
நடைக்குழந்தைகள் 12 மாதங்கள் தொடங்கி 2 வயது வரை
அசைகின்ற சத்தத்தை உருவாக்குகின்ற விளையாட்டுப் பொருட்கள் அல்லது பபிள்கள் மூலம் உங்கள் நடைக்குழந்தையின் கவனத்தைத் திசை திருப்புங்கள். பின்வீல், மஜிக் வொன்ட், மற்றும் வெளிச்சம் எரிகின்ற விளையாட்டுப் பொருட்களும் சிறந்தவையே.
3 தொடங்கி 5 வயது வரையான பிள்ளைகள்
உங்கள் பிள்ளையின் மிகப்பிரியமான விளையாட்டுப் பொருளை மருத்துவ மனைக்கு கொண்டுவாருங்கள். இரத்தம் எடுத்துக்கொண்டிருக்கப்படும்போது அவள் அதை கையில் வைத்திருக்கலாம். வெளிச்சத்தையும் சத்தத்தையும் ஏற்படுத்தும் விளையாட்டுப் பொருட்களும் பபிள்களும் உதவும்.
6 தொடங்கி 12 வயது வரையான பிள்ளைகள்
வெளிச்சத்தையும் சத்தத்தையும் ஏற்படுத்தும் விளையாட்டுப் பொருட்கள் இந்த வயதில் உள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவக்கூடும். வீடியோ கேம்ஸ், “ஸர்ச் அன்ட் பைன்ட்” புத்தகங்கள், மற்றும் பிள்ளைக்குப் பிடித்த பொம்மை மிருகங்கள் போன்றவையும் உதவக்கூடும்.
சவற்கார பபிள்களை ஊதுவதும் சில பிள்ளைகளுடைய கவனத்தை திசை திருப்பும். இப்படி ஊதும்போது ஆழமாக மூச்சுவிடுவதால் அது பிள்ளையை ஆறுதலடையச் செய்யும்.
வயதில் சற்று அதிகமான பிள்ளைகள் தங்கள் கவனத்தைத் திசைதிருப்ப தங்கள் கற்பனையை உபயோகிக்கலாம். கண்ணை மூடியபடி மிகப்பிடித்தமான ஒரு இடத்தை அல்லது ஒரு செயலை கற்பனை செய்யும்படி உங்கள் பிள்ளையிடம் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைக்கு கதைகளையோ அல்லது சிரிப்புக் கதைகளையோ சொல்லுங்கள். பதின்ம வயதுடைய அதாவது டீனேஜ் பிள்ளைகளுக்கு கதைகள், சிரிப்புக் கதைகள், மற்றும் கற்பனை விளையாட்டுக்கள் போன்றவையும் கவனத்தைத் திசைதிருப்ப உதவும்.
உதவி செய்வதற்குப் பெற்றோர் என்ன சொல்லலாம்
என்ன நடக்கப் போகின்றதென்பதை உங்கள் பிள்ளையிடம் சொல்ல நீங்கள் பயன்படுத்தும் வர்த்தைகள் முக்கியமானவை. நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை உபயோகியுங்கள். என்ன நடக்கப் போகிறதென்பதை அவளால் விளங்கிக்கொள்ளக் கூடிய வார்த்தைகளில் சொல்லுங்கள். அவள் எதைப் பார்ப்பாள், உணர்வாள், கேட்பாள், மற்றும் நுகருவாள் என்பதைப்பற்றி அவளிடம் பேசுங்கள். இரத்தம் கொடுப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை உங்கள் பிள்ளை விளங்கிக்கொள்ள உதவும்பொருட்டு, “ஊசி போடுவதற்கு டீவியில் ஒரு விளம்பரத்தைப் பார்ப்பதைவிட குறைந்த நேரமே எடுக்கும்” என சொல்லுங்கள்.
என்ன நடக்கும் என்பதை விளக்க ஒரு வழி இதோ:
- ஊசி போடப்படுமுன், பலூன் போன்ற ஒரு ரப்பர் பட்டி உங்கள் பிள்ளையின் கையைச் சுற்றிக் கட்டப்படும். இது அவளின் கையை யாரோ இறுக்குவது போன்ற உணர்வைத் தரும் என்று அவளிடம் கூறுங்கள்.
- தாதி ஒருவர் உங்கள் பிள்ளையின் கையில் ஒரு சிறிய பகுதியில் தோலை சுத்தம் செய்வார், இது குளிர்ச்சியானதாக இருக்கும்.
- ஊசி கையில் போடப்பட்டதும் ஊசிக்குள் இரத்தம் செல்ல ஆரம்பிக்கும். உங்கள் பிள்ளைக்கு கிள்ளுவது அல்லது சிறு முள் குத்துவது போன்ற சிறு வலியை ஏற்படுத்தும் ஓர் உணர்வு ஏற்படலாம் அல்லது அவள் எந்த வலியையும் உணராமல்கூட இருக்கலாம்.
- இரத்தம் எடுக்கப்பட்ட பின்பு, ஊசி வேளியே வந்ததும் ஊசி போடப்பட்ட அந்த இடத்தில் ஒரு சிறிய பன்டேஜ் போடப்படும்.
உதவக்கூடிய எனைய குறிப்புகள்
- ஏன் இரத்தம் எடுக்கப்படுகின்றதென்று உங்கள் பிள்ளையிடம் கூறுங்கள்.
- இரத்தம் எடுக்கப்படுமுன் விளையாட்டு ஊசிகளையும் எனைய மருத்துவ உபகரணங்களையும் பிள்ளைக்குக் காட்டுவது உதவியளிக்கலாம். சில மருத்துவ மனைகளில் இந்த விளையாட்டுப் பொருட்கள் இருக்கின்றன. பிள்ளைகள் இந்த விளையாட்டுப் பொருட்களைப் பார்த்து அவற்றோடு விளையாடினால், உண்மையான ஊசிகளைப் பார்க்கும்போது அவர்களுடைய கவலையைக் குறைக்க இது உதவலாம்.
- தங்களால் சில விஷயங்களை கட்டுப்படுத்த முடிந்தால் பிள்ளைகள் நல்ல விதமாக உணருகின்றார்கள். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு சில தெரிவுகளை வழங்குவதன்மூலம் அவர்கள் இவ்வாறு உணர உதவலாம். உதாரணமாக, அவள் மருத்துவமனைக்கு எதை எடுத்துச் செல்ல விரும்புகிறாள் என அவளிடம் கேளுங்கள். இரத்தம் எடுக்கப்படும் போது ஒரு விளையாட்டுப் பொருளுடன் விளையாட அல்லது பிடித்தமான ஒரு கதையைக் கேட்க அவள் விரும்புகின்றாளாவென அவளிடம் கேளுங்கள்.
- நடைபெறுகின்ற விஷயம் பிள்ளைக்குப் பிடிக்கவில்லையென்றால் அது இயல்பானதே என்று அவளிடம் கூறுங்கள். தான் எவ்வாறு உணர்கின்றால் எனபதை பிள்ளை சொல்ல அனுமதிப்பது நன்மையானது. அவளுக்கு ஊசி போடப்படும்போது அவள் ஆடாமல் அசையாமல் இருப்பதுதான் “ மிக முக்கியமான விஷயம” என்பதைச் சொல்வது ஒரு நல்ல யோசனையாகும்.
- தங்கள் கையிலிருந்து சிறிது இரத்தம் எடுக்கப்பட்ட பின்பு தங்களுடைய உடலில் போதிய அளவு இரத்தம் இல்லாமல் போய்விடுமென சில பிள்ளைகள் கவலைப்படுகின்றார்கள். சிறிது அளவு இரத்தம் மட்டுமே எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் உங்கள் பிள்ளைக்குக் கூறலாம். அவளுடைய உடல் எந்த நேரமும் புதிய இரத்தத்தை உண்டாக்குகின்றது என்பதையும் நீங்கள் அவளிடம் கூறலாம்.
முக்கிய குறிப்புகள்
- உங்கள் பிள்ளையின் இரத்தப் பரிசோதனைக்கு அவளைத் தயார்ப்படுத்தவும் இது தொடர்பான அவளின் கவலையைக் குறைக்கவும் நீங்கல் செய்யக்கூடிய காரியங்கள் இருக்கின்றன. எது மிகச் சிறந்ததென்பது பிள்ளையின் வயதிலும் அவளின் குணத்திலுமே தங்கியுள்ளது.
- பிள்ளையிடம் உண்மை பேசுங்கள். என்ன நடக்கும் எனபதை அவளால் விளங்கிக்கொள்ளக் கூடிய வார்த்தைகளில் எடுத்துச் சொல்லுங்கள்.
- இந்த நடைமுறையின்போது உங்கள் பிள்ளையின் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.
- உங்கள் பிள்ளைக்குத் தெரிவுகளைக் கொடுப்பதுகூட உதவலாம்.