மஞ்சள் காமாலை என்பது என்ன?
மஞ்சள் காமாலை என்பது தோல், உடல் திசுக்கள், மற்றும் திரவங்கள் ஆகியவற்றை மஞ்சள் நிறமாக மாற்றும் ஒரு நிலைமை. பெரும்பாலும், நீங்கள் இந்த நிறத்தைத் தோல் அல்லது கண்களின் வெள்ளைப் பகுதிகளில் காணலாம். இரத்தத்தில் பிலிரூபின் தேங்கி நிற்பதால் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. பிலிரூபின் என்பது சிவப்பணுக்கள் சிதைவடையும்போது இரத்தத்தினுள் விடுவிக்கப்படும் ஒரு நிறப்பொருள்.
மஞ்சள் காமாலை புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் சாதாரணமானது. இது ஏனென்றால் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதைவிட அதிக அளவான சிகப்பணுக்களுடன் பிறப்பார்கள். இந்த மேலதிகமான சிகப்பணுக்கள் சிதைவடையும்போது, அவை பிலிரூபினை விடுவிக்கின்றன.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கையின் முதற் சில நாட்களுக்கு மஞ்சள் காமாலை இருப்பது சாதாரணமானது. பெரும்பாலும் இது தீங்கற்றது.
பின்வரும் காரணங்களினால் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் இரத்தத்தில் பிலிரூபின் அளவு அசாதாரணமாக அதிகமாக அளவுகளில் இருக்கலாம்:
- தொற்றுநோய், வளர்சிதை சமநிலையின்மை, அல்லது வேறு நிலைமைகள் சிகப்பணுக்களை சிதைவடையச் செய்யலாம்.
- கல்லீரல், பெருங்குடல் அல்லது குடற் பிரச்சினைகள் உடலிலிருந்து பிலிரூபினை வழக்கத்துக்கு மாறாக மந்தமாக அகற்றச் செய்யும். இந்த வகையான மந்த நிலை குறிப்பிட்ட சில மருந்துகளினாலும் ஏற்படலாம்.
- புதிதாகப் பிறந்த குழந்தைகளில், பிலிரூபின்கள் உடலிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாகக் குடலிலிருந்து இரத்தத்துக்கு மீள் உறிஞ்சப்படுகிறது. நன்றாகத் தாய்ப்பலூட்டப்படாத புதிதாகப் பிறந்த குழந்தைகளில் மேலும் அதிகளவு பிலிரூபின்கள் மீள் உறிஞ்சப்படுகின்றன. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலைக்கான மிகவும் பொதுவான காரணம் இது தான்.
எனது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் அல்லது தாய்ப்பால் மஞ்சள் காமாலை இருக்கின்றதென கூறப்பட்டால் என்ன செய்வது?
தாய்ப்பாலூட்டும் மஞ்சள் காமாலை அல்லது தாய்ப்பால் மஞ்சள் காமாலையைப் பற்றிச் சிலர் பேசிக்கொள்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவை குழப்பமடையச் செய்யும் பதங்களாகும். சில மஞ்சள் காமாலைகள் தாய்ப்பாலூட்டுவதோடு சம்பந்தப்பட்டிருக்கலாம். இது சாதாரணமானது மற்றும் பொதுவாகக் குழந்தைக்கு தீங்கற்றது.
உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு எப்போதும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது நல்லது. கனேடிய குழந்தை மருத்துவ சொஸைட்டி மற்றும் ஏனைய குழந்தை மருத்துவ அமைப்புகள், உங்கள் குழந்தை பிறந்தபின் குறைந்தது 6 மாதங்களுக்காவது தாய்ப்பாலூட்டுவதை சிபாரிசுசெய்கின்றன. சில வேளைகளில், குழந்தைகள் மற்றும் தாய்மார் ஆகிய இருவருக்குமே, தாய்ப்பாலூட்டுதல் மற்றும் பொதுவாக உணவூட்டுதல் ஆகியவற்றின் பேரில உதவி தேவைப்படலாம். உங்கள் மருத்துவர், ஒரு பாலூட்டல் ஆலோசகர், அல்லது ஒரு தாதி ஆகியோர் பாலூட்டுவது பற்றி உங்களுக்கிருக்கும் கேள்விகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவற்றின் பேரில் உதவி வழங்கலாம்.
மஞ்சள் காமாலையின் அடையாளங்களும் அறிகுறிகளும்
மஞ்சள் காமாலை குழந்தையின் தோல் மற்றும் கண்களை மஞ்சள் நிறமுடையதாக்குகின்றது. இது குழந்தையை நித்திரைக் கலக்கமாக்குவதோடு சரியாகப் பாலுட்கொள்வதையும் கடினமாக்கலாம். குழந்தையின் மலம், மஞ்சள் காமாலையில்லாத புதிதாகப் பிறந்த குழந்தையில் இருப்பதைவிட நீண்ட நாட்களுக்கு கருப்பாக அல்லது கருமையாக இருக்கலாம்.
மஞ்சள் காமாலை உள்ள பிள்ளைக்கு உங்கள் மருத்துவர் என்ன செய்யலாம்
உங்கள் மருத்துவர், உங்கள் குழந்தையை உடல்ரீதியாகப் பரிசோதித்துப்பார்ப்பார். பிலிரூபினின் அளவை சரிபார்ப்பதற்காக ஒரு இலகுவான பரிசோதனையின் மூலம் நோய்க்கண்டுபிடிப்பை உறுதிசெய்வார். இந்தப் பரிசோதனை முடிவின் அடிப்படையில், உங்கள் குழந்தையை பராமரிப்பதற்கான மிகச் சிறந்த வழியை உங்கள் மருத்துவர் தீர்மானிப்பார். குழந்தையின் வயது மற்றும் பிறப்பின்போது அதன் எடை என்பனவும் மிக முக்கியமானது.
நீங்களும் உங்கள் குழந்தையும் மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் போது, உங்கள் குழந்தைக்கு உதவ நீங்கள் என்ன செய்ய வேண்டுமென, உங்கள் மருத்துவர் அல்லது தாதிவிளக்கிக்கூறலாம்.
உங்கள் குழந்தைக்கு மேலும் சிகிச்சையைத் தேவைப்படுத்தும் பிலிரூபின் அளவை அடைய அதிக பட்ச வாய்ப்பு இருப்பதாக பரிசோதனை சிபாரிசு செய்தால், உங்கள் மருத்துவர் ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்துக்கு ஏற்பாடு செய்வார். வேறொருவர் உங்கள் பிள்ளையைப் பரிசோதிப்பார்.
மஞ்சள் காமாலைக்கு சிக்கல் நிறைந்த ஒரு காரணம் இருக்கக்கூடும் என மருத்துவர் கருதினால், அவர் மேலதிக பரிசோதனைகள் செய்யத் தீர்மானிப்பார்.
மஞ்சள் காமாலையின் சிக்கல்கள்
மஞ்சள் காமாலை மிகக்கடுமையாவதை நிறுத்துவதற்கு சில குழந்தைகளுக்கு சிகிச்சை தேவைப்படும்.
கடுமையான மஞ்சள் காமாலையுடைய குழந்தைகளில் மிகச் சிறிய எண்ணிக்கையான குழந்தைகள் கெர்னிக்டெரஸ் அதாவது மஞ்சள் காமாலை மூளக் கோளாறு என்றழைக்கப்படும் ஒரு மருத்துவ நிலையை அடையக்கூடும். இது மிக அரிதானதே. மஞ்சள் காமாலை மூளக் கோளாறு நிரந்தர மூளைச் சிதைவை மற்றும் செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை
ஃபோட்டொதெரப்பி (ஒளிச் சிகிச்சை)
ஃபோட்டொதெரப்பி என்பது “ஒளியினால் சிகிச்சை செய்வது.” ஒரு மருத்துவர் அல்லது தாதி உங்கள் குழந்தையில் உடைகளைக் களைந்துவிட்டு, அவனது கண்களைப் பாதுகாத்துக்கொண்டு ஒரு விசேஷ வெளிச்சம் படும்படி அவனை வைப்பார்.
குழந்தையின் மஞ்சள் காமாலைக்கு மாற்றுமருந்தாக அல்லது மேலதிக சிகிச்சையாக பயன்படுத்தப்படும் “பிலிபிலன்கெட்” என்றழைக்கப்படும் மற்றொரு பொருளும் உள்ளது. சரியான ஒளிச் சிகிச்சையை வழங்குவதற்காக இது நுண்ணிழை ஒளியியலை (ஃபைபர் ஒப்டிக்ஸ்) உபயோகிக்கின்றது.
“பிலிபிலன்கெட்” என்றழைக்கப்படும் ஒரு பொருளும் இருக்கிறது. இது உங்கள் குழந்தையின் மஞ்சள் காமாலைக்கு ஒளியினால் சிகிச்சைசெய்யும் இன்னெரு முறை. பிளங்கட் என்பது உங்கள் பிள்ளையைச் சுற்றக்கூடிய ஒரு மேற்சட்டையுள்ள ஒரு தட்டையான மெத்தை அட்டை. இது ஒரு நீண்ட சாம்பல் நிறக் குழாயினால் ஒரு விசேஷ கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி மெத்தை அட்டையை ஒளிரச் செய்யும்.
இச் சிகிச்சைகள் முற்றிலும் பாதுகாப்பனவை.
ஃபோட்டொதெரப்பியின் பக்க விளைவுகள்
குழந்தைகள் அடிக்கடி மற்றும் இளகிய மலத்தைக் கழிக்கலாம். சில வேளைகளில் இது பச்சை நிறமாக இருக்கும். உடல் பிலிரூபினை மலத்தோடு வெளியேற்றுவதால் இது சாதாரணமானது. சிகிச்சை முடிந்ததும் இந்த பக்கவிளைவு நின்றுவிடவேண்டும்.
உடலில் நீர் வறட்சி ஏற்பட்டுவிடாமல் இருக்க ஃபோட்டொதெரப்பி பெறும் பிள்ளைகள் கண்காணிக்கப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு ஒரு இரத்த நாளத்தினூடாக (IV) மேலதிக நீர் ஏற்றப்பட வேண்டி வரலம் .
மஞ்சள் காமாலையை தவிர்த்தல்
பிறந்த பின் சில மணி நேரங்களுக்கு மற்றும் சில நாட்களுக்கு, உங்கள் குழந்தைக்கு அடிக்கடி உணவு கொடுக்கவும். விசேஷமாகத் தாய்ப்பாலூட்டவும். இது கடுமையான மஞ்சள் காமாலை வரும் ஆபத்தைக் குறைக்க உதவும். பாலூட்டுதல் உங்கள் குழந்தை அதிக மலம் கழிக்க உதவி செய்யும். பால், பிலிரூபினை அகற்றத் தேவையான சக்தியை உங்கள் பிள்ளையின் கல்லீரலுக்குக் கொடுக்கும்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
பின்வருவனவற்றின்போது உங்கள் குழந்தையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:
- உங்கள் பிள்ளை மஞ்சளாகக் காணப்படுகின்றது
- உங்கள் பிள்ளை அதிக சோம்பலாக அல்லது இயக்கம் குறைந்து இருக்கின்றது
- உங்கள் பிள்ளை சரியாக பால்குடிக்கவில்லை அல்லது உடலில் நீர் வறட்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றது
பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் குழந்தையை எடுத்துச் செல்லுங்கள் அல்லது அவசியமேற்பட்டால் 911 ஐ அழையுங்கள்:
- உங்கள் பிள்ளை உச்ச அளவு சோம்பலாக அல்லது இயக்கமற்றதாக இருக்கின்றது
- உங்கள் பிள்ளை வாந்தியெடுக்கின்றது
- குழந்தைக்கு காய்ச்சல் இருக்கின்றது
- மஞ்சள் காமாலை மோசமடைவதாக நீங்கள் கவலைப்படுகின்றீர்கள் மற்றும் மருத்துவரைப் பார்க்க முடியவில்லை
முக்கிய குறிப்புகள்
- குழந்தை மேலும் மஞ்சளாகிக்கொண்டே போவதாக காணப்படால் அதே நாளில் மருத்துவ உதவியை நாடுங்கள்.
- உங்கள் பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டுங்கள்.
- உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை சரியாகப் பால்குடிக்காதிருந்தால், அதே நாளில் மருத்துவ உதவியை நாடுங்கள்.
- மருத்துவ மனையிலிருந்து வெளியேறியபின், குழந்தையின் பிலிரூபின் அல்லது மஞ்சள் காமாலை அளவை மறுபரிசோதனை செய்வதற்காக மீண்டும் வரும்படி நீங்கள் அழைக்கப்பட்டால், அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றவும்.