டயபர் அரிப்பு என்றால் என்ன?
டயபர் அரிப்பு என்பது குழந்தைகள் அல்லது நடை குழந்தைகளின் டயபர் அணிந்திருக்கும் பகுதிகளைப் பாதிக்கும் ஒரு தோல் அரிப்பு. மிகவும் அடிக்கடி, உங்கள் குழந்தையின் உணர்ச்சிமிக்க தோலுடன், சிறுநீர் மற்றும் மலம் தொடுவதால் ஏற்படுகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு, அவர்கள் கழிப்பறையை உபயோகிக்கப் பயிற்சியளிக்கப்படுவதற்கு முன்பாக, குறைந்தது ஒரு முறையாவது டயபர் அரிப்பு ஏற்படும்.
டயபர் அரிப்புக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
டயபர் அரிப்புடைய ஒரு குழந்தை பின்வரும் அடையாளங்கள் அல்லது அறிகுறிகளைக் காண்பிக்கலாம்:
- தோல் சிவந்திருத்தல்
- எரிச்சல் அல்லது வலியுள்ள தோல்
- டயபர் அணிந்திருக்கும் பகுதியில் புள்ளிகள் அல்லது கொப்பளங்கள்
- வீரியம் குறைந்த டயபர் அரிப்பு, தோலில் இளஞ்சிவப்பு நிறப் படைகள் போல தோற்றமளிக்கும்.
- மேலும் கடுமையான அரிப்பு பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் அவற்றில் புண்கள் இருக்கலாம். இவை பெரும்பாலும் மிகவும் வலியுள்ளதாக இருக்கும்.
காரணங்கள்
டயபர் அரிப்புக்கான மிகவும் பொதுவான காரணம், சிறுநீர் மற்றும் மலத்துடன் தொடர்பாகும். இது “எரிச்சலூட்டும் டயபர் தோல் வியாதி” என்றழைக்கப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருக்கும்போது பெரும்பாலும் இது சம்பவிக்கும். மிகவும் பொதுவாக, இது புட்டம் மற்றும் தொடைகளைப் பாதிக்கும். ஸ்நக்-ஃபிட்டிங், ஈரம் உலர்வதைத் தடுக்கும், பிளாஸ்டிக் காற்சட்டைகள் அல்லது டயபர்கள் போன்றவை அரிப்பை மோசமாக்கும்.
டயபர் அரிப்பு ஈஸ்ட் தொற்றுநோயாலும் (கான்டிடா) ஏற்படலாம். இந்த பங்கசுத் தொற்றுநோய், தோல் மடிப்புகள் போன்ற வெப்பமான, ஈரலிப்பான இடங்களில் செழிப்பாக வளரும். ஈஸ்ட் டயபர் தோல் வியாதி சிவப்பு நிறத்தில் காணப்படும். பெரும்பாலும், ஓரங்களில் சிவப்புப் புள்ளிகள் இருக்கும். வழக்கமாக இதில் வலி இருக்காது. குழந்தை அன்டிபையோடிக் மருந்துகளை உட்கொள்ளும்போது இது ஏற்படலாம் அல்லது மோசமாகலாம்.
வேறு அரிப்புகள் டயபர் அணிந்திருக்கும் பகுதியில் ஏற்படலாம். எக்ஸிமா, பக்ரீரியா, வைரஸ் மற்றும் ஒவ்வாமை அரிப்புகள் போன்றவற்றை இவைகள் உட்படுத்தும். உடலின் மற்றப் பாகங்களிலும் இவை காணப்படலாம்.
சிகிச்சை
டயபரை கழற்றி விடவும். உங்களால் முடிந்தளவுக்கு உங்கள் குழந்தையின் தோலை வெப்பமான, உலர்ந்தகாற்றுப்படும்படி வைக்கவும்.
டயபரை மாற்றும்போது, உங்கள் குழந்தையின் புட்டத்தை வீரியம் குறைந்த சோப்பு மற்றும் வெந்நீரால் கழுவி, அலசி மற்றும் மெதுவாகத் தட்டி உலரவிடவும். அந்தப் பகுதிகளை வெந்நீரால் குளிப்பாட்டினால், அது உங்கள் குழந்தைக்குக் குறைவான வலியாக இருக்கும். அல்ககோலினால் துடைப்பதைத் தவிர்க்கவும். இது அதிக வேதனையைக் கொடுக்கலாம்.
ஒவ்வொரு முறையும் டயபரை மாற்றும்போதும் அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்காக, பெற்றோலியம் ஜெலி (வசிலின்) அல்லது ஸிங் ஒக்ஸைட் போன்ற வாசமேற்றப்படாத பூசு மருந்தை உபயோகிக்கவும். கிறீம்களை வேறு பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம். கிறீமை மாசுபட விடவேண்டாம். அவற்றைத் திரும்ப ஜாரினுள் வைப்பதற்கு முன்பாக உங்கள் கைகளைக் கழுவவும்.
கான்டிடா (ஈஸ்ட்) டயபர் தோல் வியாதி, மைகொஸ்ற்றரின் அல்லது குளொற்ரிமஸோல் போன்ற ஒரு அன்ரிஃபங்கல் கிறீமினால் சிகிச்சை செய்யப்படவேண்டும்.
நோயைத் தடுத்தல்
டயபர் அரிப்பைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி உங்கள் குழந்தையின் டயபரை அடிக்கடி மாற்றுவதாகும். உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தால் மிகவும் அடிக்கடி டயபரை மாற்றவும். வாசனையூட்டப்படாத பரியர் கிறீமைப் பூசுவதும் தோலைப் பாதுகாக்கும். டயபர் அரிப்பைத் தடுப்பதற்கு, துணி டயபரா அல்லது அகற்றிவிடக்கூடிய டயபரா சிறந்தது என்பது இது வரை அறியப்படவில்லை.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
டயபர் அரிப்பு ஒரு சில நாட்களில் நிவாரணமடையவில்லை அல்லது உங்கள் குழந்தை சுகவீனமுற்றிருக்கிறான்(ள்) அல்லது அவனு(ளு)க்குக் காய்ச்சல் இருக்கிறது என்றால் உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் ஒரு மருத்துவச் சந்திப்புத் திட்டத்தைச் செய்யவும்.
முக்கிய குறிப்புகள்
- டயபர் அரிப்புகள் குழந்தைகள் மற்றும் நடைகுழந்தைகளில் சாதாரணமானது
- எரிச்சலூட்டும் டயபர் தோல் வியாதி மிகவும் சாதாரணமானது
- டயபர் அணியும் பகுதியை சுத்தமாக மற்றும் உலர்ந்ததாக வைத்துக்கொள்வது அரிப்பைத் தடுக்கும்.