இதய மின் அலை வரைவு (இலெக்ரோகார்டியொகிராம்) என்றால் என்ன?
ஒரு இதய மின் அலை வரைவு என்பது (ECG) உங்கள் பிள்ளையின் இதயத்தின் மின் செயற்பாட்டை ஒரு வரைபடத்தில் பதிவு செய்யும் ஒரு பரிசோதனையாகும்.
பரிசோதனை மருத்துவருக்குப் பின்வரும் தகவல்களைக் கொடுக்கும்:
- உங்கள் பிள்ளையின் இதய மதிப்பீடு
- சீரான இதயத் துடிப்பில் ஒழுங்கின்மை
- இதயத் தசையின் பருமன்
இதய மின் அலை வரைவு (ECG)எப்படிச் செய்யப்படுகிறது?
பரிசோதனை ஏறக்குறைய 10 நிமிடங்கள் எடுக்கும். இது வலிக்காது
ஒரு தொழில்நுட்பவல்லுனர் உங்கள் பிள்ளையைப் பரிசோதனை செய்வார். தொழில்நுட்பவல்லுனர் என்பவர்கள் மருத்துவமனையில், இயந்திரங்களில் பரிசோதனைகள் செய்து கொடுப்பதற்காகப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
தொழில்நுட்பவல்லுனர் மின்வாய்கள் எனப்படும் 13 ஒட்டும் தாள்களை உங்கள் பிள்ளையின் கைகள், கால்கள், மற்றும் மார்பில் ஒட்டுவார். ஒவ்வொரு ஒட்டும் தாளிலும் மின்கம்பி இணைக்கப்பட்டிருக்கும்.
உங்கள் பிள்ளை ஒரு படுக்கையில் படுத்திருப்பான். பதிவு எடுக்கப்படும்போது 1 நிமிடத்துக்கு உங்கள் பிள்ளை பூரண அமைதியுடன் படுத்திருக்கவேண்டும்.
தொழில்நுட்பவல்லுனர் பரிசோதனை முடிவடைந்ததும் ஒட்டும் தாள்களை அகற்றிவிடுவார்.
பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
ஒரு இதய நோய் மருத்துவர் (இதயநோய் வல்லுனர்) இதய மின் அலை வரைவுப் பதிவை ஆய்வு செய்வார். இந்த மருத்துவர், பரிசோதனை செய்யும்படி கேட்ட மருத்துவருக்கு ஒரு அறிக்கை அனுப்பிவைப்பார். உங்கள் பிள்ளையின் மருத்துவர் பரிசோதனை முடிவுகள் பற்றி உங்களுடன் கலந்து பேசுவார்.
முக்கிய குறிப்புகள்
- இதய மின் அலை வரைவு (ECG) என்பது உங்கள் பிள்ளையின் இதயத்தின் மின் செயற்பாடுகளைப் பதிவு செய்யும் ஒரு பரிசோதனையாகும்.
- பரிசோதனை ஏறக்குறைய 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். அது வலிக்காது.
- பதிவு செய்யப்படும்போது 1 நிமிடத்துக்கு உங்கள் பிள்ளை பூரண அமைதியாகப் படுத்திருக்கவேண்டும்.