உங்கள் பிள்ளை ஃபீனோபர்பிட்டல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஃபீனோபர்பிட்டல் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத
உங்கள் பிள்ளை ஃபீனோபர்பிட்டல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஃபீனோபர்பிட்டல் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
இந்த மருந்து எப்படிப்பட்டது?
ஃபீனோபர்பிட்டல் என்பது குறிப்பிட்ட சில வகையான வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்காக உபயோகிக்கப்படும் ஒரு மருந்து ஆகும்.
ஃபீனோபர்பிட்டல் மருந்து, PMS- ஃபீனோபர்பிட்டல் என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஃபீனோபர்பிட்டல் மருந்து, திரவம், மாத்திரை, அல்லது ஊசிமருந்து வடிவங்களில் கிடைக்கிறது.
இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு…
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
- ஃபீனோபர்பிட்டல் மருந்துக்கு ஒவ்வாமைகள்
- போர்ஃபிரியா( சிகப்பு இரத்த அணுக்களை உண்டாக்கும் நொதிச் சத்துக்களில் ஒரு பிரச்சினை)
- சுவாசிப்பதில் கஷ்டம்
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:
- சிறுநீரக நோய்
- கல்லீரல் நோய்
உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?
- உங்கள் பிள்ளைக்கு ஃபீனோபர்பிட்டல்மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிடும் காலம் வரை, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, ஃபீனோபர்பிட்டல் மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
- ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில், ஃபீனோபர்பிட்டல் மருந்தைக் கொடுக்கவும். மருந்து கொடுக்கும் நேரத்தைத் தவறவிடாதிருப்பதற்காக, உங்களுக்கு வசதியான ஒரு நேரத்தைத் தெரிவு செய்யவும்.
- வயிற்றுக் குழப்பத்தைத் தடுப்பதற்காக ஃபீனோபர்பிட்டல் மருந்தை கூடுமானால் உணவு அல்லது பாலுடன் கொடுக்கவும்.
- உங்கள் பிள்ளை ஃபீனோபர்பிட்டல் திரவ மருந்தை உட்கொள்வதாக இருந்தால், ஒவ்வொரு வேளை மருந்தையும் அளப்பதற்கு மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி, மருந்து சொட்டும் கருவி, அல்லது பீச்சாங்குழாயை (ஸ்ரிஞ்) உபயோகிக்கவும்.
- ஃபீனோபர்பிட்டல் திரவ மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்குச் சற்று முன்னர் அதைச் சிறிதளவு தண்ணீர், பால் அல்லது பழச்சாறுடன் கலக்கவும்.
- உங்கள் பிள்ளையிடம் ஒரு பாலூட்டும் குழாய் இருந்தால், ஃபீனோபர்பிட்டல் திரவ மருந்தைக் குழாய் மூலமாகக் கொடுப்பதற்கு முன்னர், அதை தண்ணீர் சேர்த்து அதன் வீரியத்தைக் குறைப்பது பற்றிச் சிந்திக்கவும். முடிந்தால், ஃபீனோபர்பிட்டல் மருந்து கொடுப்பதற்கு முன்னரும் கொடுத்த பின்னரும் குழாய் அடைபடுவதைத் தவிர்ப்பதற்காக, குழாயினுள் மேலதிக தண்ணீர் (10 முதல் 20 மிலி) ஊற்றிக் கொடுக்கவும்.
உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
- உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
- அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
- ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?
ஃபீனோபர்பிட்டல் மருந்து அதன் முழுப்பலனை அடைவதற்கு பல வாரங்கள் செல்லும்.
இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?
உங்கள் பிள்ளை ஃபீனோபர்பிட்டல்மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
- மயக்க உணர்வு, மந்த நிலை, தலைவலி, அல்லது தலை கிறுகிறுப்பு
- குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், அல்லது வயிற்றுப்போக்கு
- பதற்றம் அல்லது எரிச்சலடைதல்
- நித்திரை செய்வதில் கஷ்டம்
பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:
- தோற்படை, அரிப்பு
- தொண்டை வலி
- காய்ச்சல், குளிர் நடுக்கம்
- அசாதாரண நசுக்குக் காயம் அல்லது இரத்தக் கசிவு
- கைகள் மற்றும் பாதங்களில் கூச்ச உணர்வு
- மஞ்சள் நிறத் தோல் அல்லது கண்கள்
- கருமை நிற சிறுநீர்
- மார்பு, மூட்டு அல்லது தசை வலி
- உங்கள் பிள்ளையின் வலிப்பு நோய் மாதிரியில் ஒரு மாற்றம்
உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?
ஃபீனோபர்பிட்டல் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் ஃபீனோபர்பிட்டல் வேளைமருந்தும் வேறு சில மருந்துகளும் ஒன்று சேர்த்து உட்கொள்வதாக இருந்தால், அவை தேவைக்குத் தகுந்தபடி சரிசெய்யப்படவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை பின்வரும் மருந்துகள் உட்பட, வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, அல்லது மூலிகை) உட்கொள்வதாக இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் தெரிவிப்பது முக்கியம்:
- லோரஸெபம் (அடிவன்) மற்றும் டையஸெபம்(வலியம்) போன்ற பென்ஸொடியஸெபைன்கள்
- எத்தொஸுக்ஸிமைட் (ஸரொன்டின்)
- லமோட்ரிஜின் (லமிக்டல்)
- வல்பிறோயிக் அசிட் (டெபகென், எபிவல்)
- வொரிகொனஸோல் (விஃபென்ட்)
- வோர்ஃபரின்(குமடின்)
ஃபீனோபர்பிட்டல் மருந்தில் இரத்தத்தில் அளவுகள் முறையாகப் பரிசோதிக்கப்படலாம். உங்கள் பிள்ளையின் இரத்தத்தின் அளவு பரிசோதிக்கப்படும் தினத்தில், இரத்தம் பரிசோதனைக்காக வெளியே எடுக்கும்வரை அடுத்த வேளைமருந்தைக் கொடுக்கவேண்டாம்.
உங்கள் பிள்ளைக்கு ஏதாவது மருத்துவப் பரிசோதனைகள் அல்லது செயற்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்பாக, உங்கள் பிள்ளை ஃபீனோபர்பிட்டல் மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதைப் பொறுப்பிலிருக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஃபீனோபர்பிட்டல் மருந்து உங்கள் பிள்ளைக்கு மயக்க உணர்வு, ,மந்த நிலை, அல்லது வழக்கத்துக்கு மாறான விழிப்புணர்வின்மை என்பனவற்றை ஏற்படுத்தும். விசேஷமாக உங்கள் பிள்ளை மருந்தை உட்கொள்ளத் தொடங்கும்போது அவ்வாறிருக்கும். உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதை உங்கள் பிள்ளையின் ஆசிரியருக்குத் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளையின் வலிப்பு நோய்கள், நடத்தை மற்றும் பாடசாலை நடவடிக்கைகளின் ஒரு பதிவை வைத்திருப்பது, உங்கள் பிள்ளைக்கு மிகச் சிறந்த வேளைமருந்து எது என்பதை அடையாளம் காண உதவி செய்யும்.
நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?
உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு ஃபீனோபர்பிட்டல் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருக்கவும். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.
ஃபீனோபர்பிட்டல் மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்க வேண்டாம்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
ஃபீனோபர்பிட்டல் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான ஃபீனோபர்பிட்டல் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
- நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது ஃபீனோபர்பிட்டல் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. ஃபீனோபர்பிட்டல் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.