உங்கள் பிள்ளை லொரஸெபம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். லொரஸெபம் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.
உங்கள் பிள்ளை லொரஸெபம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். லொரஸெபம் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
இந்த மருந்து எப்படிப்பட்டது?
லொரஸெபம் மருந்து வலிப்பு நோயை நிறுத்துவதற்காக உபயோகிக்கப்படுகிறது. இது மனக்கவலைகளுக்கு மற்றும் தசைப் பிடிப்பிலிருந்து நிவாரணமடைவதற்காகவும் உபயோகிக்கப்படுகிறது. லொரஸெபம் மருந்து நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரையாகக் கிடைக்கிறது. இதனை நாக்குக்கு அடியில் அல்லது கன்னம் மற்றும் பல்முரசுக்கிடையிலுள்ள பள்ளத்தில் வைப்பதற்கும் உபயோகிக்கலாம்.
லொரஸெபம் மருந்து, அட்டிவன்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம்.
இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு
உங்கள் பிள்ளைக்கு லொரஸெபம் மருந்துக்கு அல்லது லொரஸெபம் மாத்திரை சம்பந்தப்பட்ட எதற்காவது அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தால் உங்கள் மருந்துவரிடம் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்து அவனு(ளு)க்குத் தகுந்ததாக இருக்காது:
- ஈரல் அல்லது சிறுநீர் நோய்: லொரஸெபம் மருந்தின் ஒரு வேளைமருந்து தேவைக்குத் தகுந்தபடி சரிசெய்யப்பட வேண்டியிருக்கலாம்.
- நுரையீரல் நோய்: லொரஸெபம் மருந்து சுவாசித்தல் பிரச்சினையை மோசமாக்கலாம்.
எனது பிள்ளைக்கு இந்த மருந்தை நான் எப்படிக் கொடுக்கவேண்டும்?
- உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை உங்கள் மருத்துவர், தாதி, அல்லது மருந்தாளர் குறிப்பிட்டது போல துல்லியமாகக் கொடுக்கவும்.
- உங்கள் பிள்ளைக்குத் தேவைப்படும்போது மாத்திரம் தான் இந்த மருந்து கொடுக்கப்படவேண்டும். உங்கள் பிள்ளைக்கு எப்போது இந்த மருந்து கொடுக்கவேண்டும் என்பது பற்றி உங்கள் மருந்துவர், தாதி, அல்லது மருந்தாளரிடம் பேசவும்.
- இந்த மருந்தை நாக்குக்கு அடியில் அல்லது கன்னம் மற்றும் பல் முரசுக்கிடைப்பட்ட பள்ளத்தில் வைப்பதன் மூலம் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.
- உங்கள் பிள்ளைக்கு வலிப்புநோய் இருக்கும்போது, சிலவேளைகளில் தாடைகள் பூட்டப்பட்டுவிடுவதால், நாக்குக்குக் கீழ் மாத்திரை வைப்பது இயலாத காரியமாகிவிடும். இதற்குப் பதிலாக மாத்திரையை கன்னத்துக்கும் பல்முரசுக்கும் இடையிலுள்ள பள்ளத்தில் வைக்கவும்.
- உங்கள் பிள்ளை மாத்திரையை விழுங்கிவிட்டால், அது வலிப்பு நோயை நிறுத்துவதற்கு விரைவாக வேலை செய்யாது.
இந்த மருந்தை கன்னத்துக்கும் பல்முரசுக்குமிடையேயுள்ள பள்ளத்தில் வைப்பதற்குப் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
- சாத்தியப்படும்போது, கன்னத்துக்கும் பல் முரசுக்குக்கும் இடைப்பட்ட பகுதியை டிஷுப் பேப்பரால் உலர்த்தவும். இது கன்னத்துக்கும் பல்முரசுக்கும் இடையிலுள்ள பள்ளத்தினுள் மாத்திரை இறங்குவதைத் தடுக்கக்கூடிய மேலதிக எச்சிலை அகற்றிவிடும்.
- மாத்திரையை கன்னத்துக்கும் பல்முரசுக்கும் இடையிலுள்ள பள்ளத்தில் வைக்கவும். கன்னத்தின் வெளிப்பாகத்தை (மாத்திரை வைக்கப்படும் இடத்திற்கு மேலாக) 30 செக்கன்டுகளுக்கு மென்மையாகத் தடவி விடவும். இது மாத்திரை மேலும் விரைவாகக் கரைவதற்கு உதவி செய்யும். வலிப்பு நோய் நிவாரணமடைவதற்கு இரு நிமிடங்கள் வரை செல்லலாம்.
- வலிப்பு நோய் நிவாரணமடைவதற்காக 5 நிமிடங்கள் காத்திருக்கவும். வலிப்பு நோய் 5 நிமிடங்களில் நிவாரணமடையாவிட்டால், உங்கள் மருத்துவர் வேறுவிதமாக உங்களுக்குச் சொல்லியிருக்காவிட்டால், 911 ஐ அழைக்கவும் அல்லது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையைக் கொண்டு செல்லவும்.
இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?
இந்த மருந்து உங்கள் பிள்ளைக்கு சோர்வு, மயக்க உணர்வு, அல்லது வழக்கத்துக்கு மாறான விழிப்புணர்வில் குறைவு என்பனவற்றை ஏற்படுத்தலாம். மிகவும் அரிதாக, ஒரு பிள்ளை சிறிது நேரத்துக்கு மிக அதிக சுறுசுறுப்பு அல்லது எரிச்சல்(கடுகடுப்பு) அடையக்கூடும். உங்கள் பிள்ளைக்கு இந்தப் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாவிட்டால், அல்லது அது உங்கள் பிள்ளைக்கு த் தொந்தரவு கொடுத்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.
எனது மருத்துவரை நான் எப்போது தொடர்புகொள்ளவேண்டும்?
பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:
- விரைவான சுவாசம்
- கடுமையான சோர்வு
- சுவாசிப்பதில் சிரமம்
- நடுக்கம்
- கடுமையான பெலவீனம்
- தெளிவற்ற பேச்சு
- குழப்பம்
- நிறுத்தப்படாத வலிப்புநோய்
உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள், ஒரு மருத்துவரின் கட்டளையில்லாமல் (மருந்துக் குறிப்பு) உங்களால் வாங்கக்கூடிய மருந்துகள் கூட, கொடுப்பதற்கு முன்னர் உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவும். லொரஸெபம் மருந்து, இருமல் மற்றும் தடிமல் மருந்துகள், மற்றும் அல்கஹோல் உள்ள மருந்துகள் போன்ற சில மருந்துகளுடன் சேர்ந்து நன்கு வேலை செய்யாது.
லொரஸெபம் மருந்து உங்கள் பிள்ளைக்கு மயக்க உணர்வு, சோர்வு, அல்லது வழக்கத்துக்கு மாறான விழிப்புணர்வில் குறைவு என்பனவற்றை ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளை விழிப்புடன் இருக்கவேண்டிய, மாடிப்படி ஏறுதல் போன்ற சில காரியங்கள் செய்யும்போது அவனை(ளை)க் கவனமாகக் கண்காணிக்கவும்.
நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?
உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.
உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
உங்கள் பிள்ளைக்குத் தேவையானபடி, போதியளவு லொரஸெபம் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருக்கவும். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.
லொரஸெபம் மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
லொரஸெபம் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான லொரஸெபம் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
- நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.
பொறுப்புத் துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறன. இது லொரஸெபம் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. லொரஸெபம் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.