கண்ணீர் நாளக்குழாயில் அடைப்பு என்றால் என்ன?
கண்ணீரானது கண்களைக் கழுவி கண்களின் மேற்பரப்பை ஈரமாக வைத்திருக்கும். அவை கண்ணீர்ச் சுரப்பிகளால் (லக்ரிமல் கிளான்ட்ஸ்) சுரக்கப்பட்டு கண்களின் மேற்பரப்புக்கு குறுக்காகப் பாய்ந்தோடுகிறது. கண்ணீர், கண்ணின் ஓரத்திலிருக்கும் ஒரு சிறிய துவாரதினூடாக கண்ணீர்ப்பைக்குள் வடிந்து, கண்ணீர் நாளக்குழாய் (மூக்குக் கண்ணீர் சுரப்பி) என்னும் குழாய் வழியாக மூக்கு மற்றும் தொண்டைக்குச் செல்கிறது.
சிலவேளைகளில் இந்தக் குழாய் ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்களிலும் அடைத்துக் கொள்ளும். அடைப்பு ஏற்பட்ட நாளக்குழாய் கண்களை ஈரமானதாக மற்றும் கண்ணீர் நிறைந்ததாக ஆக்கும்.
கண்ணீர் நாளக் குழாய் அடைப்புக்கான காரணங்கள்
25 குழந்தைகளில் ஒருவருக்கு பிறக்கும்போதே கண்ணீர் நாளக் குழாயில் அடைப்பு இருக்கும். இது பெரும்பாலும் சம்பவிக்கும்; ஏனென்றால் குழந்தை பிறப்பதற்கு முன்பு கண்ணீர் நாளக்குழாயின் அடிப்பகுதி திறக்காது.
சிலவேளைகளில், ஒரு அடைப்புள்ள கண்ணீர் நாளக் குழாய் வாழ்நாளின் பிற்காலத்தில் தோன்றும்.
கண்ணீர் நாளக் குழாய் அடைப்புக்கான அறிகுறிகள்
- உங்கள் பிள்ளைக்கு கண் இமை முடிகள் ஈரமாக இருக்கலாம் அல்லது மேலதிக கண்ணீர் இருக்கலாம். இந்தக் கண்ணீர், கண்ணீர் நாளக் குழாய் வழியே வடிந்து போகாது, அதனால் கண் இமை முடிகள் வழியே சிந்தும், பெரும்பாலும் கன்னம் வரை வடியும்.
- உங்கள் பிள்ளையின் கண்ணிமைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும். பெரும்பாலும் இது காலையில் சம்பவிக்கும். வழக்கமாக கண்ணீரில் கரையக்கூடிய, கோழை என்றழைக்கப்படும் ஒரு தெளிவான, ஒட்டும் தன்மையிள்ள பசை போன்ற ஒரு பொருளினால் ஏற்படுகிறது. கண்ணீர் நன்றாக வடியாவிட்டால் கண்ணின் வெளிப்புறத்தில் கோழை ஒட்டிக் கொள்ளும். மஞ்சள் அல்லது பச்சை நிறமான திரவத்தை நீங்கள் பார்த்தால், அது தொற்றுநோயினாலுண்டான சீழ்; அது கோழை அல்ல.
- உங்கள் பிள்ளைக்கு தொற்று நோயின் காரணமாக கண் சிவந்து இருக்கலாம். கண்ணீர் சரியாக வடியாமல் இருப்பதால் தொற்றுநோய்கள் மிகவும் சாதாரணம்.
மேலதிகமாக வடியும் கண்ணீர் எப்போதுமே கண்ணீர் நாளக்குழாய் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தாது
மேலதிகமாக வடியும் கண்ணீர் எப்போதுமே கண்ணீர் நாளக்குழாய் அடைக்கப்பட்டதினால் உண்டாவதில்லை. உங்கள் பிள்ளைக்கு மேலதிக கண்ணீர் இருந்தால், அவனின் கண்கள் ஒரு கண் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்
கண்ணீர் நாளக் குழாய் அடைப்புக்கான சிகிச்சைகள்
கண்ணீர் நாளக் குழாய் அடைபட்டிருப்பதற்கு வித்தியாசமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. பின்வரும் சிகிச்சை முறைகளில் உங்கள் பிள்ளைக்கு எது சிறந்தது என்பதை உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கிச் சொல்லுவார்:
கண்ணீர் நாளக் குழாய் அடைப்புக்கான மருத்துவச் சிகிச்சைகள்
கண்களை மசாஜ் செய்தல்
பெரும்பாலும் கண்ணீர்ச் சுரப்பிப் பைகளை மெதுவாக உருவி (மசாஜ்) விடுவது கண்ணீர் நாளக் குழாய்களைத் திறக்க உதவி செய்யும். நீங்கள் பெரும்பாலும் ஒரு நாளில் 4 முதல் 6 தடவைகள் இதைச் செய்யவேண்டும். கண்ணை எப்படி மசாஜ் செய்யவேண்டும் என்பதைப்பற்றி உங்கள் மருத்துவர் விளக்குவார்.
அன்டிபையோடிக் மருந்துகள்
உங்கள் பிள்ளைக்கு தொற்று நோயிருந்தால், மருத்துவர் அன்டிபையோடிக் கண் சொட்டு மருந்து அல்லது பூசும் மருந்தை மருந்துக் குறிப்பில்எழுதித் தருவார்.
கண் சொட்டு மருந்து அல்லது பூசும் மருந்தை எப்படி தகுந்த முறையில் உபயோகிப்பது என்பதை நிச்சயப்படித்திக் கொள்ள, தயவு செய்து "கண் சொட்டு மருந்து: எப்படிப் போட்டுக் கொள்வது" மற்றும் "கண் பூசும் மருந்து: எப்படி உபயோகிப்பது" என்ற கட்டுரைகளைப் பார்க்கவும்.
கண்ணீர் நாளக் குழாய் அடைப்புக்கான அறுவைச் சிகிச்சை
பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை செய்தும் நிவாரணம் கிடைக்காவிட்டால், உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் பிள்ளையின் கண்ணீர் சுரப்புப் பையில் நோய்த்தொற்று மற்றும் கண்விழிக்கும் மூக்கின் அருகாமைக்கும் இடயிலுள்ள தோல் சிவந்தும் வீங்கியும் இருந்தால் அவனுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
உங்கள் பிள்ளையின் கண்ணீர் நாளக் குழாயின் அடைப்பு எவ்வளவு கடுமையானது மற்றும் அவனது வயது என்பனவற்றின் அடிப்படையில், எந்த செயல்முறை உங்கள் பிள்ளைக்கு சிறந்த சிகிச்சையைக் கொடுக்கும் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவர் உங்களுடன் கலந்து பேசுவார். அந்தச் செயல்முறையில் உட்பட்டிருக்கும் ஆபத்துக்கள் பற்றியும் உங்கள் மருத்துவர் உங்களுடன் கலந்து பேசுவார்.
அடைபட்டிருக்கும் ஒரு கண்ணீர் நாளக் குழாயைத் திறந்துவிடுவது ஒரே நாள் அறுவைச் சிகிச்சையாகச் செய்யப்படும். அதாவது, உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சை முடிந்தபின், இரவில் மருத்துவமனையில் தங்கமாட்டான்.
அறுவைச் சிகிச்சைக்குமுன், உங்கள் பிள்ளைக்கு, “ஸ்லீப் மெடிசின்” என்றழைக்கப்படும் ஒரு பொதுவான மயக்க மருந்து கொடுக்கப்படும். உங்கள் பிள்ளை நித்திரை செய்வான் மற்றும் அறுவைச் சிகிச்சை சமயத்தில் எந்த வலியையும் உணரமாட்டான் என்பதை இது அர்த்தப்படுத்தும்.
வெவ்வேறு வகையான அறுவைச் சிகிச்சைகள் இருக்கின்றன:
ஊசிக்கருவியால் குத்துதல் மற்றும் நீர்ப்பாய்ச்சுதல்
கண்ணீர் நாளக் குழாயில் ஊசிக்கருவியால் குத்துதல் என்பதுதான் மிகவும் பொதுவான அறுவைச் சிகிச்சை. மருத்துவர் கண்ணீர் நாளக் குழாயில் தண்ணீர் பாய்ச்சவும் கூடும்.
- கண்ணீர் நாளக் குழாய் அடைப்பைத் திறப்பதற்காக , ஒரு மெல்லிய மழுங்கிய ஊசி, கண்ணீர் நாளக் குழாயினுள் செலுத்தப்படும்.
- கண்ணீர் நாளக் குழாயுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக மற்றும் கண்ணீர் நாளக் குழாய் திறக்கப்பட்டுவிட்டதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக, இரண்டாவது மழுங்கிய ஊசி மூக்கினுள் செலுத்தப்படும்.
- இதன் பின்பு, மருத்துவர் கண்ணீர் நாளக் குழாயில் நீர் பாய்ச்சுவது பற்றித் தீர்மானிப்பார். நீர் பாய்ச்சுவது என்பது ஒரு கதீற்றரை உள்ளே வைத்து சேலைன் கரைசலை ( கிருமிகள் அழிக்கப்பட்ட உப்பு நீர் ) அதனூடாக வேகமாகப் பாய்ச்சுவதாகும். கதீற்றர் என்பது உடலிலிருந்து திரவத்தை வெளியே வடியச்செய்யும் ஒரு குழாயாகும்.
சிலிக்கன் குழாயை உட்செருகுதல்
மருத்துவர் ஒரு மெல்லிய குழாயை கண்ணீர் நாளக் குழாயினுள்ளே வைப்பது, சிலிக்கன் குழாய் உட்செருகுதல் ஆகும். கண்ணீர் நாளக் குழாய் திரும்பவும் அடைத்துவிடுவதைத் தடுப்பதற்காக, அந்தக் குழாய் பல வாரங்களுக்கு அங்கேயே விடப்பட்டிருக்க்கும்.
கண்ணீர்ப்பை நாசி வாயமைப்பு
“டக்-றீ-ஒ-ஸிஸ்-ரொ-றை-நொஸ்-ரொ-மீ” என்பது கண்ணீர் நாளக் குழாய் பை மற்றும் மூக்கிலுள்ள எலும்பினூடாக ஒரு புதிய திறப்பை உண்டாக்கும் ஒரு அறுவைச் சிகிச்சையாகும். இது கண்ணீரை மூக்கினூடாக வடிய அனுமதிக்கும்.
அறுவைச் சிகிச்சைக்குப்பின் உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்
உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட கண்ணிலும் அதன் அருகாமையிலும் கொஞ்சம் வலி இருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு ஏதாவது வலி நிவாரண மருந்தை நீங்கள் கொடுக்கலாமா என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
உங்கள் பிள்ளையின் கண்ணீர் மற்றும் மூக்கிலிருந்து வெளியேறும் திரவங்கள், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு இரத்தம் கலந்ததாக இருக்கலாம். இது சாதாரணம். அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பகுதியிலும் கொஞ்சம் இரத்தம் கலந்த திரவம் வெளியேறலாம். இது சம்பவித்தால், சுத்தமான மருந்திட்ட துணியால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். தொடர்ந்து திரவம் அல்லது இரத்தம் வெளியேறினால் அல்லது அது மஞ்சள் அல்லது பச்சை நிறமாக மாறினால் உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளைக்கு, கண்ணீர் நாளக் குழாயில் ஒரு குழாய் வைக்கப்பட்டிருந்தால், குழாய் உள்ளே இருக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய திட்டவட்டமான அறிவுரைகள் ஏதாவது இருக்கின்றனவா என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
வழகமாகப் பாதிக்கப்பட்ட கண்(கள்)ணுக்குக் கட்டுப்போடப்பட மாட்டாது. கண்ணுக்குக் கட்டுப்போடப்பட்டிருந்தால், உங்கள் மருத்துவர் அதை எப்போது அகற்ற வேன்டும் என்று சொல்லுவார்.
மருத்துவர் பாதிக்கப்பட்ட கண் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் உபயோகிப்பதற்காக அன்டிபையோடிக் பூசு மருந்து அல்லது கண் சொட்டு மருந்தை எழுதித் தருவார். மருத்துவக் குறிப்பைப் பெற்றுக்கொள்வதில் நிச்சயமாயிருங்கள். அதிலுள்ள அறிவுரைகளைக் கவனமாகப் பின் பற்றுங்கள்.
பூசு மருந்து அல்லது கண் சொட்டு மருந்தை தகுந்தமுறையில் உபயோகப்படுத்துவதை நிச்சயப்படுத்திக்கொள்ள, தயவு செய்து "கண் பூசு மருந்து: எப்படி உபயோகப்படுத்துவது" அல்லது கண் சொட்டு மருந்து "எப்படிப் போட்டுக்கொள்வது"என்ற கட்டுரைகளைப் பார்க்கவும்.
குளிர் நீர் அழுத்தக்கட்டுகள்
சௌகரியமாக உணருவதற்காகவும் வீக்கத்தைக் குறைப்பதற்காகவும், சில மருத்துவர்கள் கண்களில் குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ் தண்ணீரினால் , ஈரமான கட்டு போடும்படி யோசனை சொல்லலாம். உங்கள் பிள்ளைக்கு குளிர்ந்த நீர் அழுத்தக்கட்டு போட முடியுமா என உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேளுங்கள்.
குளிர்ந்த நீர் அழுத்தக்கட்டுகளைத் தயாரிக்க பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
- எப்போதும் உங்கள் பிள்ளையின் கண்களைத் தொடுவதற்கு முன்னும் தொட்ட பின்னரும் உங்கள் கைகளைக் கழுவுங்கள். நீங்கள் உபயோகிக்கும் எந்த கொள்கலனும் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஒரு சுத்தமான முகந்துடைக்கும் துணியை குளிந்த நீரில் நனைய வைக்கவும். குளிர்ந்த குழாய்த் தண்ணீர் சிறந்தது. உங்களிடம் கிணற்றுத் தண்ணீர் இருந்தால், அதை உபயோகிப்பதற்கு முன்பு, கொதிக்கவைத்து குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து குளிர வைக்கவும்.
- துணியிலுள்ள மேலதிக தண்ணீரை வெளியேற்றுவதற்காக, துணியைப் பிழியவும். பின்பு அதை வீங்கிய கண்ணின் மேல் போடவும்.
- ஒரு தடவையில் 2 நிமிடங்களுக்கு மேல் துணியைப் போட்டு வைத்திருக்க வேண்டாம்.
- ஒரு சில தடவைகள் தொடர்ந்து செய்யவும். உங்கள் பிள்ளைக்கு, ஈரக்கட்டு சிகிச்சை எவ்வளவு அடிக்கடி செய்யப்பட வேண்டும் என்று மருத்துவரிடம் கேளுங்கள். பெரும்பாலும் முதல், 1 முதல் 2 நாட்களில் , ஒரு நாளுக்கு பல தடவைகள் செய்யப்படுவது சரியானது.
நடவடிக்கைகள்
மூக்கைச் சிந்துதல் மற்றும் துடைத்தல்
- மூக்கைச் சிந்தக்கூடாது. உங்கள் பிள்ளை 2 வாரங்களுக்கு மூக்கைச் சிந்தக்கூடாது
- மூக்கை மென்மையாகத் துடைப்பது சரியானது.
விளையாட்டுகள் மற்றும் போட்டி விளையாட்டுகள்
- மென்மையான விளையாட்டுக்கள் மாத்திரம். செயல்முறையைத் தொடர்ந்து, முதல் வாரத்துக்கு, வீட்டுக்குள் விளையாடக்கூடிய மென்மையான விளையாட்டுகள், ஒரு கம்யூட்டரை உபயோகித்தல், மற்றும் தொலைக்காட்சி பார்த்தல் போன்ற கடினமில்லாத நடவடிக்கைகள் சரியானது.
- செயல்முறையைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மற்றும் உங்கள் பிள்ளை மருத்துவரை சந்திக்கும் வரை நீச்சலடிப்பதற்கு அனுமதியில்லை. உங்கள் பிள்ளை எப்போது நீச்சலடிக்க அனுமதிக்கப்படுவான் என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
- மற்றப் பிள்ளைகளுடன் தொடார்பு வைத்துக்கொள்ளக்கூடிய விளையாட்டுக்களை உங்கள் பிள்ளை விளையாட அனுமதிக்க வேண்டாம். ஸோக்கர் அல்லது ஹொக்கி, அல்லது உங்கள் பிள்ளை வேறு பிள்ளையைத் தொட்டு அல்லது மோதி விளையாடுவது போன்ற விளையாட்டுகளை, விளையாட அனுமதிக்க வேண்டாம்
- கடினமான நடவடிக்கைகள், மணல்தொட்டியில் விளையாடுதல், வளைதல், மற்றும் உங்கள் பிள்ளைக்கு மூச்சுத் திணறக்கூடிய ஏதாவது உடற்பயிற்சிகள் என்பனவற்றைத் தவிர்க்கவும்.
- உங்கள் பிள்ளை திரும்பவும் எப்போது வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேளுங்கள்.
பாடசாலை மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையம்
- பொதுவாக, பிள்ளைகள் பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கோ 1 முதல் 2 நாட்களுக்கு அல்லது சிலவேளைகளில் அதற்குமதிகமாக , போகக்கூடாது. உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேட்கவும்.
- கடினமான விளையாட்டுக்கள் அல்லது போட்டி விளையாட்டுக்கள் போன்ற, உங்கள் பிள்ளை ஈடுபட முடியாத நடவடிக்கைகள் பற்றி உங்கள் பிள்ளையின் ஆசிரியரிடம் சொல்லவும்.
ஷவரில் குளித்தல் மற்றும் தலை கழுவுதல்
- ஷவரில் குளித்தல் மற்றும் தலை கழுவுவதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்
சூரிய வெளிச்சம் படும்படியிருத்தல்
- சூரிய வெளிச்சம் படக்கூடாது. உங்கள் பிள்ளை எப்போது வெயிலில் போவது சரியானது என்று உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.
தொடர் சிகிச்சைக்கான மருத்துவ சந்திப்புத் திட்டங்கள்
அறுவை சிகிச்சை முடிந்து 1 முதல் 2 வாரங்களுக்கு, தொடர் சிகிச்சைக்கான மருத்துவ சந்திப்புத் திட்டத்துக்காக உங்கள் பிள்ளையைக் கொண்டு வர வேண்டும்.
தொடர் சிகிச்சைக்கான மருத்துவ சந்திப்புத் திட்டம் எப்போது செய்யப்படவேண்டும் என்று உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேளுங்கள்.
முதல் சந்திப்புத் திட்டத்துக்கான திகதி மற்றும் நேரத்தை இங்கே எழுதவும்:
சிலவேளைகளில், அறுவைச் சிகிச்சை திரும்பவும் செய்யப்பட வேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளைக்குத் திரும்பவும் அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறதா என்பது பற்றி உங்கள் மருத்துவர் சொல்லுவார்.
உங்கள் பிள்ளைக்கு கண்ணீர் நாளக் குழாயில், குழாய் வைக்கப்பட்டிருந்தால், அறுவைச் சிகிச்சை நடைபெற்ற சிலவாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பின்னர் அதை வெளியேற்றுவதற்காக, தொடர் சிகிச்சைக்கான மருத்துவ சந்திப்புத் திட்டம் செய்யவேண்டும்.
மருத்துவரை எப்போது அழைக்கவேண்டும்
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்கு பின்வரும் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் கண்ணை அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை அழைக்கவும்:
- சரியாகப் பார்க்கமுடியவில்ல அல்லது கண்பார்வையில் பிரச்சைனை இருக்கிறது.
- வலி அதிகமாகிக்கொண்டே போகிறது.
- வயிற்றுக் கோளாறு
- கண் திடீரெனப் புடைத்தல் அல்லது கண் வீக்கம் அதிகரித்துக்கொண்டே போதல்
- இரத்தக் கசிவு
முக்கிய குறிப்புகள்
- கண்ணீர் நாளக் குழாயில் இருந்து கண்ணீர், மூக்குக்கு போகும் பாதையில் தடைப்படும்போது, கண்ணீர் நாளக் குழாய் அடைப்பு உண்டாகிறது.
- கண்ணீர் நாளக் குழாய் அடைப்பு பெரும்பாலும் பிறப்பிலேயே உண்டாகும்.
- கண்ணீர் நாளக் குழாய் அடைப்பு நோய்க்கு அனேக சிகிச்சை முறைகள் உண்டு.
- உங்கள் பிள்ளை, செயல்முறைகளின் பின்னர் எவற்றைச் செய்ய முடியும் மற்றும் எவற்றைச் செய்ய முடியாது என்பது பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவர் விளக்கிச் சொல்லுவார்.