எக்ஸீமா (அடொபிக் டெர்மடைடிஸ்)

Eczema (atopic dermatitis) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

அடொபிக் டெர்மடைடிஸ் என்றால் என்ன மற்றும் உங்கள் பிள்ளை அதைச் சமாளிக்க நீங்கள் என்ன உதவி செய்யலாம் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும்.

அடொபிக் டெர்மடைடிஸ் (எக்ஸீமா) என்றால் என்ன?

அடொபிக் டெர்மடைடிஸ் என்பது ஒரு நீண்ட காலம் நீடித்திருக்கிற தோல் நிலைமை. இது பல வடிவங்களில் ஏற்படும். இது எக்ஸீமா என்றும் அழைக்கப்படும்.

எக்ஸீமா நோயினால் தோல் உலர்வாகவும் அதிக அரிப்புள்ளதாகவும் மாறும். இந்த நிலைமை பெரும்பாலும் மோசமாகும் காலமும் உண்டு, மற்றும் நிலைமை முன்னேற்றமடையும் காலமும் உண்டு. நிலைமை மோசமாகும்போது, இதை ஒரு திடீர் வெளிப்பாடு என அழைக்கிறோம். திடீர் வெளிப்பாடுகள் பெரும்பாலும் குளிர் காலங்களில் (வின்டர் காலத்தில்) காற்று உலர்ந்ததாய் இருக்கும்போது ஏற்படுகிறது.

சில சமயங்களில், எக்ஸீமா நோயுள்ள பிள்ளைகள் பெரியவர்களாக வளரும்போது, அவற்றின் அறிகுறிகள் குறையும் அல்லது முழுமையாக மறைந்துவிடும். மற்றப் பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் எக்ஸீமா நோய் இருக்கும்.

எக்ஸீமா நோய்க்கு என்ன காரணம் என்பது எமக்குத் துல்லியமாகத் தெரியாது. மரபு வழி மற்றும் சுற்றாடல் காரணிகள் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். எக்ஸீமா நோயுள்ள பிள்ளைகளுக்கு ஆஸ்துமா, ஹேஃபீவர், அல்லது வேறு ஒவ்வாமைகள் இருக்கலாம்.

எக்ஸீமா நோய்க்கு எந்த நிவாரணமுமில்லை. ஆனால், நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்கவும் மருத்துவரிடம் எப்போது திரும்பிச் செல்லவேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும், உங்கள் உடல்நலப் பராமரிப்புக் குழு உங்களுடன் வேலை செய்யும்.

எக்ஸீமா நோயின் அறிகுறிகள்

சில பிள்ளைகளுக்கு மிகவும் கடுமையாக எக்ஸீமா நோய் இருக்கும்போது, மற்றப் பிள்ளைகளுக்கு மிகவும் வீரியம் குறைந்த நோய் இருக்கும். உங்கள் பிள்ளை அனுபவிக்கக்கூடிய சில காரியங்கள் பின்வருமாறு:

  • தோல் அரிப்பு
  • உலர்ந்த தோல்
  • சிவந்திருத்தல்
  • எக்ஸிமா திட்டுக்கள் (செதில்கள் போன்ற படை)
  • நித்திரையின்மை
  • தோல் தடித்தல், சிவத்தல், வீக்கம், சொறி, மற்றும் சொறிதலினால் ஏற்படும் அசௌகரியம்
  • தோலின் நிறம் மாறுதல்
  • மேலும் மோசமான நிலைமைகளில், தெளிந்த திரவம் கசிதல், பொருக்கு உருவாதல் மற்றும் தோல் உதிர்தல்
  • சுய- மதிப்புப் பிரச்சினைகள் அல்லது சங்கடப்படுதல்
Photo of mild atopic dermatitis
Photo of moderate atopic dermatitis
Photo of severe atopic dermatitis

எக்ஸீமா நோய் எப்படிக் கண்டறியப்படுகிறது

எக்ஸீமா நோயைக் கண்டறிவதற்காக, உங்கள் பிள்ளையின் மருத்துவர் பின்வருவனவற்றைச் செய்வார்:

  • உங்கள் பிள்ளையின் தோலைப் பரிசோதித்தல்
  • அரிப்பு எப்போது ஆரம்பித்தது, அதை எது மோசமாக்குகிறது அல்லது முன்னேற்றமடையச் செய்கிறது, மற்றும் வருடத்தில் எந்தக் காலப்பகுதியில் அது ஏற்படுகிறது உட்பட, அரிப்பைப் பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்பார்
  • ஆஸ்துமா, ஹேஃபீவர், மற்றும் வேறு ஒவ்வாமைகளுக்காக உங்கள் பிள்ளையை மதிப்பீடு செய்வார்
  • குடும்ப அங்கத்தினர் வேறு எவருக்காவது எப்போதாவது, எக்ஸீமா, ஆஸ்துமா, அல்லது ஒவ்வாமைகள் இருந்தனவா என உங்களிடம் கேட்பார்

மிகவும் கடுமையான நிலைமைகளில், தோலில் திரவம் கசியும்போது, பொருக்கு உருவாகும்போது அல்லது தோல் உதிரும்போது, மருத்துவர் பரிசோதனைக்காக, உங்கள் பிள்ளையின் தோலில் ஒரு மாதிரியை எடுத்துக் கொள்வார். இது உங்கள் பிள்ளைக்கு ஒரு தோல் தொற்றுநோய் இல்லை என்பதை நிச்சயப்படுத்த உதவும்.

எக்ஸீமா நோயை எப்படி சமாளிப்பது

குளித்தல் மற்றும் ஈரமாக வைத்திருப்பது உட்பட, நல்ல தோல் பராமரிப்பு, உங்கள் பிள்ளையின் எக்ஸீமா நோயை சமாளிப்பதற்கான முக்கியமான ஒரு பாகமாகும். உங்கள் பிள்ளையின் எக்ஸீமா நோய்க்குக் காரணமான சுற்றுச் சூழல் காரணிகளையும் நீங்கள் கண்டு பிடித்து, உங்கள் பிள்ளையை அவற்றிலிருந்து விலகியிருக்க உதவி செய்யவேண்டும். ஆயினும், அநேக திடீர் வெளிப்பாடுகள் ஒரு சுற்றுச் சூழல் தூண்டுதல் இல்லாமலும் ஏற்படுகின்றன.

உங்கள் பிள்ளைக்கு உதவி செய்வதற்காக, மருத்துவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளையும் எழுதிக் கொடுக்கலாம். இந்த மருந்துகள் தோலில் பூசும் மருந்தாக இருக்கலாம் அல்லது வாய் மூலமாக உட்கொள்ளும் மாத்திரைகளாக இருக்கலாம்.

தோல் பராமரிப்பு

குளித்தல்

நோயின் திடீர் வெளிப்பாடுகளைச் சமாளிப்பதற்கும் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கும் குளித்தல் பெரும்பாலும் ஒரு முக்கியமான படியாகும். உங்கள் பிள்ளை குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளிக்கவேண்டும், சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை குளிக்கலாம்.

  • உங்கள் பிள்ளையை இதமான சூடுள்ள வெந்நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை குளிப்பாட்டவும். சூடான நீரையல்ல, ஆனால் இதமான சூடுள்ள நீரை உபயோகிப்பது முக்கியம். சூடான நீர் தோலில் எரிச்சலை உண்டாக்கும் மற்றும் அரிப்பைத் தூண்டிவிடும். அத்துடன், 5 முதல் 10 நிமிடங்கள் குளிப்பது தோலில் நீரேற்றுவதற்கு மிகவும் சிறந்தது. அதற்கு மேலாகத் தண்ணீருக்குள் இருப்பது எந்தப் பலனையும் காண்பிக்காது. அது தோலை மேலும் உலர்ந்து போக செய்யக்கூடும். உங்களுக்கு ஒரு நினைப்பூட்டுதல் தேவை என்றால் கடிகார டைமரை உபயோகிக்கவும்.
  • உங்கள் பிள்ளை குளியல் தொட்டியில் இருக்கும்போது, அவனது இடுப்பு உயரம் வரை தொட்டியை நீரால் நிரப்பவும்.
  • சோப்பு சேர்க்கப்படாத கிளென்ஸர்களை அல்லது மிகவும் வீரியம் குறைந்த சோப்புப் பொருட்களை உபயோகிக்கவும். ஏதாவது சோப்பு உபயோகிப்பதாக இருந்தால், தேவையான பகுதிகளுக்கு கடைசியில் மாத்திரம் உபயோகிக்கவும். துணியால் அல்லது நுரையால் துடைக்கவேண்டாம் . இது தோல் அரிப்பை ஏற்படுத்தும். மேலுமாக உலர்ந்து போவதைத் தடுப்பதற்காக, சோப்பு முழுவதையும் நன்கு அலசி விடவும்.
  • தோல் அரிப்பைக் கட்டுப்படுத்தி உங்கள் பிள்ளையின் தோலைப் பாதுகாப்பதற்கு, நீங்கள் செய்யக்கூடிய அநேக காரியங்கள் இருக்கின்றன.
  • உங்கள் மருந்துவர் சுட்டிக் காண்பித்தபடி, பாதிக்கப்பட்ட தோல் பகுதி முழுவதிலும் ( கடினமான, சிவந்த, மேடான பகுதிகளில்) எழுதிக்கொடுக்கப்பட்ட பூசுமருந்து அல்லது கிறீமைப் பூசவும்.
  • எழுதிக் கொடுக்கப்பட்ட செயற்பாடுள்ள பூசுமருந்து அல்லது கிறீமைப் பூசிய பின்னர், பாதிக்கப்படாத தோற்பகுதிகளுக்கு மேல் பெற்றோலியம் ஜெலி அல்லது மொய்ஸ்டரைஸரைத் தடவவும்.
  • வோஷ் குளோத்கள், ஸ்பொன்ஞ்சுகள், அல்லது லூஃபாக்களை உபயோகிக்கவேண்டாம். இவற்றைத் தோலில் தேய்க்கும்போது எரிச்சலை உண்டாக்கும்.
  • உங்கள் பிள்ளையின் தோலின் சிவப்பு நிறம், எரிச்சல், அல்லது திடீர் வெளிப்பாடுகளைப் பரிசோதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகக் குளிக்கும் நேரத்தை உபயோகிக்கவும்.

எமல்சிஃபையிங் எண்ணெய்களை உபயோகித்தல்

எமல்சிஃபையிங் எண்ணெயைச் சேர்ப்பதும் தோல் நீரேற்றப்பட்டதாக வைத்துக்கொள்ள நன்றாக உதவிசெய்யும். அல்ஃபா கேரி எண்ணெய், ஒயிலட்டம், அல்லது அவீனோ எண்ணெய் போன்ற எமல்சிஃபையிங் எண்ணெய்கள் குளியல் நீருடன் கலந்து, தோல் சிறிதளவு தண்ணீரை உறிஞ்சி வைத்திருக்க உதவி செய்யும்.

  • உங்கள் பிள்ளை குளியல் தொட்டிக்குள் இறங்குவதற்கு முன்னர் எமல்சிஃபையிங் எண்ணெயை குளியல் தொட்டியிலுள்ள நீருடன் கலக்கவும். குளியல் தொட்டி நீரைச் சுற்றி எண்ணெயைக் கலக்கவும்.
  • உங்கள் பிள்ளை குளியல் தொட்டிக்குள் இறங்கும்போதும் வெளியேறும் போதுக் கவனமாக இருக்கவும். ஏனென்றால் எண்ணை வழுக்கக்கூடியதாயிருக்கும். அதனால் உங்கள் பிள்ளை காயமடையலாம்.

எமல்சிஃபையிங் எண்ணெயை உபயோகிக்கும்போது, உங்கள் பிள்ளை வழக்கமாகச் செய்யும் அதே குளியல் முறையை உபயோகிக்கவேண்டும்:

  • 10 முதல் 15 நிமிடங்களுக்குக் குளிக்கவும்
  • வெளியேறவும் மற்றும் உடலைத் தட்டிக் கொடுத்து உலர வைக்கவும்
  • மருந்து குறிப்பில் எழுதிக் கொடுக்கப்பட்ட செயற்பாடுள்ள பூசு மருந்துகள் அல்லது கீறிம்களைத் தடவவும்
  • மொய்ஸ்டரைஸைத் தடவவும்

குறிப்பு: எமல்சிஃபையிங் எண்ணெய் சாதாரணமான குளியல் எண்ணெய், தாவர எண்ணெய், அல்லது வேறு வகையான எண்ணெய்கள் போன்றதல்ல. இந்த வகையான எண்ணெய்கள் தோலை மூடி தண்ணீர் அல்லது மொய்ஸ்டரைஸர் உட்செல்லாதவாறு தடை செய்யும். ஆனால், எமல்சிஃபையிங் எண்ணெய், தண்ணீரைத் தோலினுட் செல்ல உதவி செய்யும்.

மொய்ஸ்டரைஸிங்

எக்ஸீமாவின் மிகவும் சாதாரண அம்சங்களில் ஒன்று உலர்ந்த தோல் ஆகும். தோல் உலரும்போது அது அரிப்பு எடுக்கத் தொடங்கும். அது ஒரு பாதுகாப்புத் தடையாகச் செயல்படுவதையும் இழக்கத் தொடங்கும். அதாவது, மேலதிக தண்ணீர் தோலிலிருந்து இழக்கப்படும் மற்றும் அரிப்புக்கான காரணியும் தோலினுட் செல்லும். இரண்டும் எக்ஸீமாவின் திடீர் வெளிப்பாடுகளைத் தூண்டும்.

மொய்ஸ்டரைஸர்கள் தோலரிப்பைக் குறைக்கவும் தோலை மென்மைப்படுத்தவும் உதவி செய்யும். அவை தோலின்மீது ஒரு பாதுகாப்புப் படலத்தை ஏற்படுத்துவதன்மூலம் இதைச் செய்கிறது. இது தோலினுள் தண்ணீரை வைத்திருக்கவும் அரிப்புக்கான காரணியை வெளியே வைத்திருக்கவும் உதவி செய்கிறது. மொய்ஸ்டரைஸர்கள் என்பது, கொழுப்புகள், எண்ணெய்கள், மற்றும் தண்ணீரின் கலவையாகும். உபயோகப்படுத்தப்படும் 3 வகையான மொய்ஸ்டரைஸர்கள் இருக்கின்றன. அவையாவன: பூசு மருந்துகள், கிறீம்கள், மற்றும் லோஷன்கள் என்பன.

  • பூசு மருந்துகள் தடிப்பான, அதிக எண்ணெய்ப் பசையுள்ள பொருட்கள். இவற்றுள் பெரும்பாலானவை தண்ணீரைக் கொண்டிருப்பதில்லை. மிகவும் உலர்ந்த தோல் மற்றும் தோலின் பெரும்பாலான பகுதிகளை நீரேற்றுவதற்கு இவைதான் மிகவும் பலன் தரும் முறைகளாகும். பெரும்பாலும் இவை எக்ஸீமா நோயுள்ள நோயாளிகளால் நல்ல முறையில் தாங்கிக் கொள்ள முடிகிறது.
  • கிறீம்கள் கொழுப்புகள் மற்றும் தண்ணீரின் கலவையாகும். அவை தோலில் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் உணரச் செய்யும். தோல் உலர்ந்து போவதைத் தடுப்பதற்கும் தோல் வெடிக்கும்போதும் கிறீம்கள் மிகவும் அடிக்கடி உபயோகிக்கப்படுகின்றன. இந்தப் பொருட்கள் பெரும்பாலும் எக்ஸீமா நோயாளிகளின் தோலில் எரிச்சலை உண்டாக்கும் அல்லது கூர்மையான வலியை ஏற்படுத்தும்.
  • லோஷன்கள் மிக அதிகளவு தண்ணீரைக்கொண்டுள்ளது. அவை இலகுவாகப் பரவும் மற்றும் தோலைக் குளிர்ச்சியாக்கும். அவற்றை உச்சந்தலையிலும் உபயோகிக்கலாம். இவை, உலர்ந்த தோலை ஈரலிப்பாக்குவதற்குப் பூசு மருந்துகள் அல்லது கிறீம்களைப் போல பலனளிப்பவையல்ல. லோஷன்கள் தோலில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் அல்லது மிகவும் உலர்ந்த தோலில் கூர்மையான வலியை ஏற்படுத்தலாம்.

தோலில் அரிப்பையுண்டாக்கும் எந்தப் பொருளையும் தவிர்க்கவேண்டும்

மருந்துகள் மற்றும் வேறு சிகிச்சைகள்

உங்கள் பிள்ளையின் எக்ஸீமா நோய் எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்து உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான மருந்துகளை எழுதிக் கொடுக்கக்கூடும்.

டொப்பிக்கல் கோர்டிக்கோஸ்டெரொயிட்டுகள்

தோலில் பூசும் கோர்டிக்கோஸ்டெரொயிட்டுகள் என்பது தோலில் பூசும் ஸ்டெரொயிட் கீறிம்கள் அல்லது பூசு மருந்துகள். ஸ்டெரொயிட்டுகள், தோலின் வீக்கத்துடன் கூடிய எரிவைக் குறைக்க உதவி செய்வதற்கு பலன் தரும் வழியாகும். தோலில் வீக்கத்துடன் கூடிய எரிவு என்பது வீக்கம், சிவத்தல், மேடாதல், மற்றும் தோல் எரிச்சல் என்பனவற்றை ஏற்படுத்தும். குறைந்தளவு தோலில் வீக்கத்துடன் கூடிய எரிவு, குறைந்தளவு அரிப்பை ஏற்படுத்தும். எனவே குறைந்தளவு சொறிதல் இருக்கும்.

இந்த மருந்துகள் வலிமையின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எந்தக் கோர்டிக்கோஸ்டெரொயிட்டு உபயோகிக்கிறீர்கள் என்பது, உடலில் எங்கே திடீர் வெளிப்பாடு ஏற்படும் மற்றும் அவை எவ்வளவு மோசமானவை என்பதில் தங்கியுள்ளது. உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு முகத்துக்கு வீரியம் குறைந்த கோர்டிக்கோஸ்டேரொயிட்டு தேவைப்படலாம். ஆனால், உடலுக்கு அதிக வீரியமுள்ள கோர்டிக்கோஸ்டெரொயிட்டு தேவைப்படும். உங்கள் பிள்ளைக்கு எந்த வகை மிகச் சிறந்தது என உங்கள் மருத்துவர் விளக்குவார்.

டொப்பிக்கல் ஸ்டெரொயிட்கள் தகுந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்டால், பக்கவிளைவுகள் மிகவும் குறைவானதாக இருக்கும்.

டொப்பிக்கல் கல்சினெயூரின் இன்ஹிபிட்டர்கள்

இந்த மருந்துகள் பின்வருவனவற்றில் உபயோகப்படுத்தப்படுகின்றன:

  • ஸ்டெரொயிட்டு உபயோகிப்பது தொடர்பாகப் பக்கவிளைவுகள் உள்ள பிள்ளைகள்
  • டொப்பிக்கல் ஸ்டெரொயிட்டுகளுக்குப் பிரதிபலிப்பு காண்பிக்காத எக்ஸீமா நோயுள்ள பிள்ளைகள்

அன்டிஹிஸ்டமைன்கள்

எக்ஸீமா நோயுடன் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணமடைய உதவியாக, அன்டிஹிஸ்டமைன்களை டொப்பிக்கல் பூசுமருந்துகளுடன் சேர்த்து உபயோகிக்கலாம். அவை எல்லாருக்கும் பலனளிக்காது. டொப்பிக்கல் அன்டிஹிஸ்டமைன்கள் தோலுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதனால் டொப்பிக்கல் அன்டிஹிஸ்டமைன்களை விட, வாய் மூலமாக உட்கொள்ளும் அன்டிஹிஸ்டமைன்கள் விரும்பப்படுகின்றன.

சில அன்டிஹிஸ்டமைன்கள் நித்திரை அல்லது சோர்வை ஏற்படுத்தலாம். அரிப்பினால் இரவில் நித்திரை செய்யமுடியாத பிள்ளைகளுக்கு இது உதவியாக இருக்கும். உங்கள் பிள்ளை அன்டிஹிஸ்டமைன்களைப் பகல் நேரத்தில் உட்கொள்ள வேண்டியிருந்தால், அந்தத் தெரிவைப்பற்றி மருந்துவர் உங்களுடன் மீள்பார்வை செய்வார்.

அன்டி-இன்ஃபெக்டிவ் ஏஜன்ட்கள் (தொற்றுநோய்க் கொல்லிப் பிரதிநிதிகள்)

எக்ஸீமா நோயைக் கொண்டிருப்பது ஒருவரின் தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். சொறிதல் தோல் தடையைத் தகர்க்கலாம். அது தோலிலுள்ள பக்டீரியா உட்சென்று தொற்றுநோயை ஏற்படுத்த இலகுவாக்கும். வைரசுகள் அல்லது பங்கசுக்களும் தோல் தடையைத் தாண்டிச் செல்லலாம் ஆயினும் இது மிகவும் சாதாரணமானதல்ல. தோலிலுள்ள தொற்றுநோய் எக்ஸீமா நோயை மேலும் மோசமானதாக்கும்.

தொற்றுநோய்க் கொல்லிப் பிரதிநிதிகள் என்பது, பக்டீரியா (அன்டிபையோடிக் மருந்துகள்), வைரசுக்கள் (வைரஸ் கொல்லி), மற்றும் பங்கசு (பங்கசுக் கொல்லி) என்பனவற்றால் ஏற்படும் தொற்றிநோய்க்களுக்கு எதிராகப் போரிடும் மருந்துகளாகும். தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளித்து சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுப்பதுதான், தொற்றுநோய்க் கொல்லிப் பிரதிநிதிகளின் உபயோகம். உங்கள் பிள்ளைக்கு ஒரு தொற்றுநோய்க் கொல்லி தேவைப்பட்டால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு தொற்றுநோய்க் கொல்லி மருந்தை, மருந்துக் குறிப்பில் எழுதித் தருவார்.

நிலக்கரித் தார் தயாரிப்புகள்

சுத்தம் செய்யப்படாத நிலக்கரித் தார் தோலில் வீக்கத்துடன் கூடிய எரிவு மற்றும் புண்களுக்குச் சிகிச்சையளிக்க உபயோகிக்கப்படலாம். அது வலியைத் தணிக்கும் ஒரு நிலைமையை உருவாக்கும். இந்தச் சிகிச்சையில் அநேக உட்பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் எல்லாம் இதுவரை அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் அவற்றிற்கு நோய்களை நிவாரணமடையச் செய்யக்கூடிய தன்மைகள் இருப்பதாகக் காணப்படுகிறது. அநேகர் இந்த வகையான சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள்; ஏனென்றால் , இது அழுக்கானதாக இருக்கலாம், துர்நாற்றத்தைக் கொண்டிருக்கலாம், அதிக காலத்தை எடுத்துக்கொள்ளலாம், மற்றும் இது வசதிக் குறைவானதாகவும் இருக்கலாம்.

மூலிகைப் பரிகாரங்கள் மற்றும் மாற்றுச் சிகிச்சை

தோல் பிரச்சினைகள் உட்பட, அநேக சீர்குலைவு நிலைகளுக்கு மூலிகைப் பரிகாரங்கள் மற்றும் மாற்றுச் சிகிச்சைகளின் உபயோகத்தில் அதிகரிப்பு இருக்கிறது. உபயோகங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • மூலிகை மற்றும் உணவு சப்ளிமென்ட்டுகள்
  • விட்டமின்கள்
  • மருந்துக் குறிப்பில்லாது வாங்கும் பொருட்கள்

ஆயினும், இந்தப் பொருட்கள் எக்ஸீமா நோய்க்கு உதவி செய்வதாக ஆய்வுகள் காண்பிக்கவில்லை. உங்கள் பிள்ளை உபயோகிக்கும் எதாவது மாற்றுச் சிகிச்சைகள் மற்றும் சப்ளிமென்ட்டுகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

அரிப்பைச் சமாளித்தல்

எக்ஸீமா நோயின் அரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக நீங்கள் மற்றும் உங்கள் பிள்ளை உபயோகிக்கக்கூடிய சில குறிப்புகள் பின்வருமாறு:

மொய்ஸ்டரைஸருக்கான குறிப்புகள்

  • ஈரப்பதமாக்கவும், ஈரப்பதமாக்கவும், ஈரப்பதமாக்கவும்!
  • மொய்ஸ்டரைஸர்கள் மற்றும் மருந்துகளைக் குளிர்ச்சியாக வைக்கவும்.
  • அற்ககோல் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்ற அரிப்புக்கான காரணிகளைக் கொண்ட பொருட்களைத் தவிர்க்கவும்.
  • தோலை ஈரப்பதமாக்கியதைத் தொடர்ந்து ஒரு குளிர்ச்சியான வோஷ் குளோத்தைத் தோலின் மேல் போடவும்.

உடைக்கான குறிப்புகள்

  • உங்கள் பிள்ளையை, தளர்வான ஒரு அடுக்கு பருத்தி பிஜாமா உடையுடன் நித்திரை செய்ய வைக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்குப் பருத்தி உடையை அணிவிக்கவும். நைலோன், கம்பளி, அல்லது வேறு கரடுமுரடான துணிகளைத் தவிர்க்கவும். இவை தோலில் அதிகளவு அரிப்பை ஏற்படுத்தும்.
  • பருத்திப் போர்வைகள் மற்றும் படுக்கைகளை உபயோகிக்கவும்.
  • உடையில் இணைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்களையும் அகற்றிவிடவும். சில வேளைகளில் இவையும் தோலில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

சொறிதலைக் குறைப்பதற்கான குறிப்புகள்

  • உங்கள் பிள்ளை அரிப்பை உணரும்போது சொறிதலைக் குறைப்பதற்காக குளிர்ச்சியான உடைகளை உபயோகிக்கவும்.
  • உங்கள் பிள்ளையின் விரல் நகங்களைக் குட்டையாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும்.
  • திடீர் வெளிப்பாடு ஏற்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும் தங்கள் தோலைச் சொறியாதிருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வளர்ந்த பிள்ளைகளுக்கு விளக்கவும். சொறிதல் மேலும் அரிப்பு மற்றும் வீக்கத்துடன் கூடிய எரிவை உண்டாக்கும். இது நிலைமையை முன்னேற்றுவிக்காது ஆனால் மோசமாக்கும்.
  • உங்கள் பிள்ளை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வழக்கமாக சொறிவதை நீங்கள் அவதானித்தால், அந்த சமயத்தில் மொய்ஸ்டரைஸர்களைப் பூசுவதற்காக நேரத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தப் பழக்கத்தை முறியடிக்கலாம்.

உங்கள் பிள்ளையின் சுற்றுச் சூழலைச் சமாளிப்பதற்கான குறிப்புகள்

  • சுற்றாடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும். மின் விசிறிகளை உபயோகிக்கவும்.
  • உடன் சேர்ந்து நித்திரை செய்யும்(பிள்ளை பெற்றோர்களுடன் சேர்ந்து நித்திரை செய்வது) நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களைப் போல பிள்ளையும் அதே படுக்கையில் நித்திரை செய்யும்போது, உடற் சூட்டின் காரணமாக ஏற்பட்ட வியர்வையின் காரணாமாக திடீர் வெளிப்பாடு உண்டாக்கலாம்.
  • நீங்களும் உங்கள் பிள்ளையும் பின்பற்றக்கூடிய ஒரு ஒழுங்கான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மன உளைச்சலைக் குறைப்பதற்கு உதவி செய்யவும். அரிப்பு அதிகரிப்பதற்குச் சிலவேளைகளில் மன உளைச்சல் காரணமாகலாம்.
  • குளிர் காலங்களில் பிள்ளையின் அறையில் ஈரப்பத மூட்டியை உபயோகிக்கவும். குடும்ப அறை அல்லது பேஸ்மன்ட் போன்ற, அடிக்கடி உபயோகிக்கும் அறைகளிலும் ஈரப்பத மூட்டியை வைக்கலாம்.

வேறு ஆலோசனைகள்

பருவகால மாற்றங்கள்

அதிக குளிரான, உலர்வான மாதங்களில் உங்கள் பிள்ளையின் எக்ஸீமா நோய் மோசமாவதை நீங்கள் கண்டிருக்கலாம். இந்தக் காலப் பகுதியில் காற்று மிகவும் உலர்ந்தாகி, மிகக் குறைந்தளவு ஈரப்பதத்தை வைத்திருக்கும். இது தோலை அதிக உலர்வானதாக்கும். வெப்பமான மாதங்களில், உலர்ந்த காற்றைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் உங்கள் பிள்ளையைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது முக்கியம்.

எக்ஸீமா நோயைச் சமாளித்தல்

எக்ஸீமா நோயின் தினசரி பராமரிப்பு மார்க்கம் உங்களுக்கு, உங்கள் பிள்ளைக்கு, மற்றும் உங்கள் மற்றக் குடும்ப அங்கத்தினருக்கும் மிகுந்த மன உளைச்சலைக் கொடுப்பதாக இருக்கலாம். அந்த மார்க்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் பிள்ளையின் எக்ஸீமா நோயைச் சமாளிப்பதற்கு அதைச் செயற்படுத்த வேண்டும். அதற்கு உங்கள் பிள்ளையின் உடல் நலப் பராமரிப்புக் குழு ஒரு நல்ல ஊற்றுமூலமாக இருக்கும்.

பாடசாலை மற்றும் நடவடிக்கைகள்

எக்ஸீமா நோயுள்ள உங்கள் பிள்ளை ஒரு குழந்தை அல்லது நடை குழந்தையாக இருந்தால், உங்கள் பகல் நேரப் பராமரிப்பு நிலையப் பணியாளர்கள் மற்றும் அங்கு ஆஜராகும் மற்றப் பிள்ளைகளின் பெற்றோரிடம் எக்ஸீமா நோயைப் பற்றிப் பேசவும். உங்கள் பிள்ளைக்கு இந்த நிலைமை இருக்கிறது மற்றும் அது மற்றப் பிள்ளைகளுக்குப் பரவாது என விளக்கவும்.

எக்ஸீமா நோயுள்ள பிள்ளைகளுக்குப் பாடசாலை, ஒரு பெரிய அளவு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். பெற்றோர்கள், குடும்ப அங்கத்தினர்கள், மற்றும் ஆசிரியர்கள் இந்தப் பிள்ளைகள் அனுபவிக்கும் மன உளைச்சலையும் மற்றும் இந்தப் பிள்ளைகளுக்கு மேலதிக உணர்ச்சி ரீதியான ஆதரவு மற்றும் புரிந்து கொள்ளுதல் தேவைப்படும் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

உங்கள் பிள்ளை, தன்னால் முடிந்தளவு அதிகமான வழக்கமான நடவடிக்கைகளில் பங்குபற்றுவது என்பது முக்கியம். அவனுக்கு உதவி செய்வதற்காக உங்களால் சில மாற்றங்களைச் செய்ய கூடியதாக இருக்கலாம்.

உங்கள் பிள்ளை எப்போது மருத்துவரைச் சந்திக்கவேண்டும்

பின்வரும் நிலைமைகளில் உங்கள் பிள்ளையின் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்:

  • மருந்துகள் பலன் கொடுக்காவிட்டால் அல்லது உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமாகிக்கொண்டே போனால்
  • பொருக்கு, கசிதல், அல்லது சீழ் போன்ற தொற்றுநோய்க்கான ஏதாவது அறிகுறிகளின் பின்னர்

முக்கிய குறிப்புகள்

  • அடொபிக் டெர்மடைடிஸ் (எக்ஸீமா ) என்பது பல வடிவங்களில் ஏற்படும், ஒரு நீண்ட காலம் நீடித்திருக்கிற தோல் நிலைமை. தோல் உலர்ந்ததாகவும் மிகவும் அரிப்புள்ளதாகவும் மாறும். தோல் மோசமாகும் அல்லது முன்னேற்றமடையும் காலங்கள் இருக்கின்றன.
  • தோலைச் சொறிதல், சிவத்தல், வீக்கம், சேதாரம், மற்றும் அசௌகரியம் என்பனவற்றை ஏற்படுத்தும். மேலும் மோசமான நிலைமைகளில், தெளிந்த திரவம் கசிதல், பொருக்கு உண்டாதல், மற்றும் தோல் உதிர்தல் என்பன ஏற்படலாம்.
  • தோல் அரிப்பைக் கட்டுப்படுத்தி உங்கள் பிள்ளையின் தோலைப் பாதுகாப்பதற்கு, நீங்கள் செய்யக்கூடிய அநேக காரியங்கள் இருக்கின்றன
Last updated: December 29 2009